பாடல் எண் :3244

காண்டலுந் தொழுது வீழ்ந்துட னெழுந்து
கரையிலன் பென்பினை யுருக்கப்
பூண்டவைம் புலனிற் புலப்படா வின்பம்
புணர்ந்துமெய் யுணர்வினிற் பொங்கத்
தாண்டவம் புரியுந் தம்பிரா னாரைத்
தலைப்படக் கிடைத்தபின் சைவ
ஆண்டகை யாருக் கடுத்தவந் நிலைமை
விளைவையா ரளவறிந் துரைப்பார்.
90
(இ-ள்.) காண்டலும்...எழுந்து - முன் கூறியவாறு காட்டக் கண்டவுடனே தொழுது நிலமுற விழுந்து உடன் எழுந்து நின்று; கரையில்...உருக்க - கரை காணாத பேரன்பானது எலும்பினையும் உருகச் செய்ய; பூண்ட...பொங்க - இயைந்த ஐம்புலங்களாலும் அறியப்படாத பேர் ஆனந்தம் தம்முள்ளே கலந்து மெய்யுணர்வினிலே நிறைந்து மேம்பட; தாண்டவம்...கிடைத்தபின் - ஆனந்தப் பெருங்கூத்தியற்றும் தமது பெருமானாரை நேரே பெறும்படி கிட்டிய பின்னர்; சைவ....உரைப்பார் - சைவ ஆண்டகையாராகிய நம்பிகளுக்குப் பொருந்திய அந்நிலைமையின் அதீதமாகிய ஆனந்தத்தின் விளைவினை அளவறிந்துரைக்க வல்லவர் யாவர்? (ஒருவருமிலர்.)
(வி-ரை.) காண்டலும் - முன் கூறியபடி திருவருள் காட்டக் காணலும். பூண்ட ஐம்புலனிற்....பொங்க - பூணுதல் - ஒவ்வோர் புலனும் உரிய ஒவ்வோர் பொறியினைப் பொருந்தியறிதலாற் பூண்ட ஐம்புலன் என்றார்; ஐம்புலனிற் புலப்படா இன்பம் - ஐம்பொறிகளுக்கும் விடயமாகிய ஐம்புல வின்பங்களுக்குட்படாத பேரின்பம். புலன்களுக்குமெட்டாத என்க; ஐம்புலனாலும் அறியப்படாத சிவானந்த இன்பம். ஐம்புலனிலும் என முற்றும்மை தொக்கது.
புணர்ந்து மெய்யுணர்வினிற் பொங்க - புலனின்பம் புணரு முணர்வு வேறு; இங்கு அவற்றாற் புலப்படா இன்பம் புணர்வுறும் மெய்யுணர்வு - சிவானந்த போக பூமி - வேறு; இது சிவஞானஅருட்புவனமாகிய அருளுணர்விற் பொங்கிற்று என்பது.
தாண்டவம்...கிடைத்தபின் - அருட் கூத்து ஆடும் தமது பெருமானை வெளிப்படக் கை வரும்படி நேர் பெற்றபின்; தலைப்படுதல் - கிட்டுதல்; கிடைக்கப் பெறுதல்.
சைவ ஆண்டகையார்....நம்பிகள்; ஆண்டகைமை - அன்பின் உறைப்பாகிய வீரம்.
அடுத்த அந்நிலைமை விளைவு - பெற்ற சிவானந்தத்தின் விளைவாகிய போகம்.
யார் - உரைப்பார் - யார் என்ற வினா ஒருவருமிலர் என்று எதிர்மறை குறித்து நின்றது; ஆதலின் எம்மாற் சொல்லலாகாதது என்பது குறிப்பெச்சம்.
குறிப்பு: - இப்பாட்டினையும் "ஐந்து பேரறிவும்" என்ற திருப்பாட்டினையும் ஒப்பிட்டுக் காண்க.