அந்நிலை நிகழ்ந்த வாரருள் பெற்ற வன்பனா ரின்ப வெள்ளத்து மன்னிய பாடன் மகிழ்ந்துடன் பரவி வளம்பதி யதனிடை மருவிப் "பொன்மணி மன்று ளெடுத்தசே வடியார் புரிநடங் கும்பிடப் பெற்றால் என்னினிப் புறம்போ யெய்துவ"தென்று மீண்டெழுந் தருளுதற் கெழுவார், | 91 | (இ-ள்.) அந்நிலை....அன்பனார் - அத்தன்மை நிகழப் பெற்ற நிறைந்த அருளினைப் பெற்ற அன்பனாராகிய நம்பிகள்; இன்பவெள்ளத்து...பரவி - இன்பப் பெருக்கிலே நிலைத்த திருப் பாட்டினை மகிழ்ச்சியோடும் பாடித் துதித்து; வளம்பதி...மருவி - வளம் பொருந்திய அப்பதியினிடைத் தங்கியிருந்தருளி; பொன்மணி...என்று - அழகிய பொன்னம்பலத்தினில் எடுத்த சேவடியினையுடைய கூத்தப்பெருமானார் புரிநடனத்தினைக் கும்பிடும் பேறு பெற்றால் இனிப் புறமே சென்று கிடைக்கப்பெறும் பொருள் வேறென்ன உள்ளது? (ஒன்றுமில்லை) என்ற கருத்துடனே; மீண்டு - அங்கு நின்றும் புறப்பட்டு; எழுந்தருளுதற் கெழுவார் - செல்வதற்குத் துணிந்தெழுவாராகி; (வி-ரை.) அந்நிலை நிகழ்ந்த - "அடுத்த அந்நிலைமை" (3244) என்று முன்பாட்டிற் கூறி முடித்த அந்த என அகரம் முன்னறி சுட்டு; நிலையாவது முன்கூறிய சிவானந்த அனுபவநிலை. நிகழ்ந்த - நிகழப்பெற்ற. மன்னிய பாடல் - இப்பதிகம் கிடைத்திலது! மருவி - சிலகாலம் தங்கியிருந்து. "பொன்மணி....எய்வது" என்று - இக்கருத்துடன் கூடிய பதிகம்பாடி அருள் விடை பெற்று என்பது. நடம் கும்பிடப் பெறுதலே எல்லாவற்றிலும் சிறந்த பேறு; வீடுதரும் தன்மையுடையது; ஆதலின் இதனை விட்டுப் புறம்போய்ப் பெறுவது தான் யாது? ஒன்றுமில்லை என்பதாம்; "கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதா மின்பமாம்" என்ற கருத்து; என்று - என்ற பொருள் கொண்ட பதிகம் பாடியருளி; இப்பதிகமும் கிடைத்திலது! மீண்டு - முன் 3244-ல் உரைத்தபடி இறைவர் வயமேயாகித் தன்னை மறந்த அழுந்திய நிலையினின்றும் வெளிப்பட்ட நிலையின் மீண்டு என்க. எழுந்தருளுதற்கெழுவார் - அங்கு நின்றும் புறப்பட்டுச் செல்வதற்கு எழுவாராகி; எழுவார் - நீங்கி - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. இவ்வாறன்றி, உலகியல் வழக்கில் போகின்றேன் என்னாது, வருகின்றேன் - போய்வருகின்றேன் என்று விடைபெறும் மரபுக்கு ஏற்ப இங்கு உரைத்துக்கொள்வதுமாம். |
|
|