வீடு தருமிக் கற்குடியில் விழுமி யாரைப் பணிந்திறைஞ்சி நீடு விருப்பிற் றிருப்பதிக நிறைந்த சிந்தை யுடன்பாடிப், பாடும் விருப்பிற் றொண்டருடன் பதிகள் பலவு மணைந்திறைஞ்சித் தேடு மிருவர் காண்பரியார் திருவாறை மேற்றளி சென்றடைந்தார். | 93 | (இ-ள்.) வீடு....பாடி - முத்திதரும் இந்தக் கற்குடிமலையில் விழுமிய நாதரைப் பணிந்து நிலமுற வீழ்ந்திறைஞ்சிப், பெருவிருப்பினாலே அன்பினால் நிறைந்த சிந்தையோடு திருப்பதிகம்பாடி; பாடும்...இறைஞ்சி - மேலும் திருப்பதிகங்கள் பாடித் துதிக்கும் விருப்பினாலே திருத்தொண்டர்களுடனே பற்பல பதிகளையும் சென்று வணங்கி; தேடும்....அடைந்தார் - மேலும் கீழுமாகத் தேடிய மால் பிரமர் இருவர்க்கும் காண்பதற்கரியவராகிய சிவபெருமானது திரு ஆறை மேற்றளியினைச் சென்று அடைந்தருளினர். (வி-ரை.) இக்கற்குடி - கற்போர் மனம் நம்பிகளுடன் அப்பதியினில் அடைந்திருத்தலால் இகரச்சுட்டினாற் கூறினார். விழுமியார் - கற்குடி யிறைவரது பெயர். "கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தை" (தாண்டகம்); "கற்குடிக் கற்பகத்தை" (நம்பிகள்). பணிந்திறைஞ்சி - பணிதல் - அஞ்சலிகூப்பி வணங்குதல்; இறைஞ்சுதல் - நிலமுற வீழ்ந்து வணங்குதல். பாடும் விருப்பில் - மேலும் மேலும் சென்று அங்கங்கும் பாடித் தொண்டு செய்யும் விருப்பினாலே; "அருச்சனை பாட்டேயாகும் ஆதலான் மண்மே னம்மைச் சொற்றமிழ் பாடுக" என்று, தடுத்தாட்கொண்ட ஞான்று ஆண்டவர் பணித்தருளியமையால் அத் திருத்தொண்டு விருப்பினால் என்றது குறிப்பு. பதிகள் பலவும் - இவை, திருச்சிராப்பள்ளி, திருவெறும்பியூர், திருவேங்கூர், திருக்காட்டுப்பள்ளி, திருவாலம் பொழில், திருப்பூந்துருத்தி, திருக்கண்டியூர், திருவேதிகுடி, திருத்தண்டங்குறை, திருப்புள்ள மங்கை ஆலந்துறை, திருச்சக்கரப்பள்ளி; திருப்பாலைத்துறை, திருச்சேலூர், திருநல்லூர் முதலியன என்பது கருதப்படும். குறிப்பு :- திருச்சிராப்பள்ளியினின்றும் காவிரி, குடமுருட்டியாறு, இவற்றின் தென்கரை வழி அடுத்து ஒரு பாதை நீளச்செல்கின்றது; அது அரசங்குடியினின்றும் திருக்காட்டுப்பள்ளிவரை (10 நாழிகை) சிற்றடிப் பாதையாகவும், பின்பு பெரும் பாதையாகவும் உள்ளது; இது சுருங்கிய நேர்வழியாதலின் இவ்வழியே நம்பிகள் சென்றிருத்தல் கூடுமென்பது கருதி மேல் உரைக்கப்பட்டது. தேடும் இருவர் - அடியும் முடியும் தேடும் மாலும் அயனும். அக்கற்குடி - என்பதும் பாடம். |
|
|