பாடல் எண் :3249

ஏரின் மருவு மின்னம்பர் மகிழ்ந்த வீசர் கழல் வணங்கி
ஆரு மன்பிற் பணிந்தேத்தி யாரா வருளா லங்கமர்வார்
போரின் மலியுங் கரியுரித்தார் மருவும் புறம்ப யம்போற்றச்
சேரு முள்ள மிக்கெழமெய்ப் பதிகம் பாடிச் செல்கின்றார்.
95

(இ-ள்.) ஏரின்...அமர்வார் - அழகினாலே பொலிகின்ற திருவின்னம்பரில் மகிழ்ந்தெழுந்தருளிய இறைவரது திருவடிகளை வணங்கி நிறைந்த அன்பினாலே பணிந்து துதித்துத் தெவிட்டாத அருளினாலே அங்கு விரும்பித்தங்குவாராகிய நம்பிகள்; போரின்...செல்கின்றார் - போர்த் தொழிலின் மிக்க யானையினை உரித்தருளிய இறைவர் எழுந்தருளிய திருப்புறம்பயத்தினை வழிபடுதற்குச் சென்று சேரும் திருவுள்ளத் தன்பு மீக்கூர மெய்த்திருப்பதிகத்தினைப் பாடிக்கொண்டு செல்கின்றாராகி,
(வி-ரை.) ஏரின் மருவும் - ஏர் - அழகு.
ஆரும் அன்பின் - ஆராஅருளால் - ஆரும் - ஆரா - முரண் அணிச்சுவைபடக் கூறியது; அன்பு - நிறைவுபடும்; அருள் எஞ்ஞான்றும் தெவிட்டாது பெருகும்.
பணிந்து ஏத்தி - இப்பதிகம் கிடைத்திலது!
சேரும் உள்ளம் மிக்கெழு மெய்ப்பதிகம்பாடிச் செல்கின்றார் - ஒரு பதியினை நோக்கிச் செல்லும்போதே அதனைச் சேர்வோம் என்று துதித்துக்கொண்டே செல்லுதல் அதில் வைத்த ஆர்வப் பெருக்கினைக் காட்டுவதாம். "முதுகுன்றடைவோமே" "சோற்றுத் துறை சென்றடைவோம்" "காழிசேர்மினே" (தேவா) முதலியவை காண்க. உள்ளம் - உள்ளத்தின் வேட்கை குறித்தது. "நினைத்தன" (பதிகம்).
பாடிச் செல்கின்றார் - பாடியவாறே செல்வாராகி; பதிகம் மேற்பாட்டில் விரிக்கப்படும்.
மெய்ப் பதிகம் - "மெய்த் திருவாக்கெனு மமுதம்" (2986); மெய்ம்மை - அறிவுறாத சத்தாந்தன்மை.