"அங்க மோதியோ ராறை மேற்றளி" யென்றெ டுத்தமர் காதலிற் பொங்கு செந்தமி ழால் விரும்பு "புறம் பயந்தொழப்போதுமென்" றெங்கு மன்னிய வின்னி சைப்பதி கம்பு னைந்துட னெய்தினார் திங்கள் சூடிய செல்வர் மேவு திருப்பு றம்பயஞ் சேரவே. | 96 | (இ-ள்.) அங்கமோதி...என்று - "அங்க மோதியோ ராறை மேற்றளி" என்று தொடங்கி விருப்பமிக்க ஆசையினாலே பொங்கும் செந்தமிழினாலே தாம் "விரும்பும் புறம்பயந் தொழப்போதுமே" என்று; எங்கும்...புனைந்து - எங்கும் நிலைபெற்ற இன்னிசையினையுடைய திருப்பதிகத்தை அருளிச் செய்து; திங்கள்...சேரவே - சந்திரனைத் தரித்த செல்வராகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருப்புறம்பயத்தினைச் சேரும்படி; உடன் எய்தினார் - உடன் சென்றருளினர். (வி-ரை.) அங்கமோதி...என்றெடுத்து - பதிகத் தொடக்கமாகிய முதற் குறிப்பு. அமர் காதல் - மிக்க காதல்; அமர்தல் - பிறழாது நிறைவுறுதல்; விரும்புதல் என்றலுமாம். காதலிற் பொங்குதலாவது மீக்கொண்ட காதல் காரணமாக ஊற்றெடுத்து மேன்மேல் வழிதல் போலத் தடையிலாது முயற்சியின்றித் தானே வருதல். செந்தமிழ் இன்னிசை - இயலும் இசையும் கூடிய நிலை குறித்தது; இசை - கொல்லியாகிய பண்ணமைதியும் தாள அமைதியும் யாப்பமைதியும் ஆகிய நிலையெல்லாவற்றின் தொகுதி; "தமிழ்ச் சீரினால்" என்பது பதிகம். (10) "புறம்பயந் தொழப் போதும்" என்று - இது பதிகக் குறிப்பும் கருத்துமாகிய மகுடம்; பதிகத்தின் "புறம்பயந் தொழப் போதுமே" என்று பாட்டுத்தோறும் முடிபு வருதல் காண்க. உடன் விரைவாக; ஆர்வங் குறித்தது. செல்வர் - முத்திச் செல்வமுடையவர்; "செல்வப் புறம்பயம்" என்பது பதிகம். சேரவே - எய்தினார் என்று கூட்டுக. வினைமுற்று முன் வந்தது செயல் முற்றின விரைவு குறித்தது. |
|
|