அப்ப திக்க ணமர்ந்த தொண்டரு "மன்று வெண்ணெய்நல் லூரினில் ஒப்ப ருந்தனி வேதி யன்பழ வோலை காட்டிநின் றாண்டவர் இப்பதிக்கண்வந் தெய்தவென்ன தவங்க"ளென்றெதிர் கொள்ளவே முப்பு ரங்க ளெரித்த சேவகர் கோயில் வாயிலின் முன்னினார். | 97 | (இ-ள்.) அப்பதிக்கண்...எதிர்கொள்ளவே - அந்தப் பதியிலே வாழ்ந்த தொண்டர்களும் "அன்று திருவெண்ணெய் நல்லூரிலே ஒப்பற்ற தனியாகிய வேதியனாய் வந்த இறைவரால் பழவோலையினைக்காட்டி நின்று ஆட்கொள்ளப் பெற்ற நம்பிகள் இந்தப் பதியில் வந்து சேர என்ன தவங்களைச் செய்தோம்" என்று மகிழ்ந்து எதிர்கொள்ளவே; முப்புரங்கள்...முன்னினார் - திரிபுரங்களையும் எரித்த இறைவரது திருக்கோயிலின் வாயில் முன்பு வந்து சேர்ந்தனர். (வி-ரை.) "அன்று...தவங்கள்" என்று இது திருப்புறம்பயத்தின் தொண்டர்கள் எண்ணியும் சொல்லியும் மகிழ்ந்த கருத்து. ஒப்பரும் தனிவேதியன் - "ஒப்பரும் - தனக்குவமையில்லாதான்" (குறள்); தனி - "ஒன்றே பதி" (போதம்); "தனியாய் நின்றான்" (198) "ஒருவர்" (174) என்றபடி அவ்வழக்கினும் வேறு யாரும் தன் பக்கம் சேர்வோரின்றித் தனியாய் நின்றவன் என்ற குறிப்புமாம்; தனிவேதியன் - 175 - 178 பார்க்க. அன்று - தடுத்தாட்கொண்ட அன்று - முன்னை நாளில்; பண்டறிசுட்டு. அன்று...ஆண்டவர் - அம்மையாரால் ஞானவமுதூட்டப்பெற்ற சிறப்பால் ஆளுடைய பிள்ளையாரையும், கன்மிதப்பிற் கடல் கடந்து போந்த தன்மையாலும் சூலை தந்தாட்கொள்ளப்பெற்ற சிறப்பினாலும் ஆளுடைய அரசுகளையும் உலகர் தேற்றமாக அறிந்து பாராட்டுதல்போல், நம்பிகளை இச்சிறப்பினால் அறிந்து போற்றுவர். 1443-1484 முதலியவை பார்க்க. எய்த - எய்தப் பெறுவதற்கு; பெறுதற்கரிய இப்பெரும்பேறு கிடைப்பதற்கு. என்ன தவங்கள் - எத்தகைய பெருந் தவங்கள் செய்தோம்! என்று அற்புதக் குறிப்புப்படக் கூறியபடி; செய்தோம் என்பது சொல்லெச்சம்; பெருந்தவம் முன்னர்ச் செய் திருந்தாலன்றி இப்பேறு பெறுதல் அரிதென்பது கருத்து. சேவகர் - ஆண்மையும் வெற்றியுமுடையார்; "தந்திமேல் விடைமே லழகர் சேவகஞ் செய்தவாறு" (திருவிளை. புரா - விருத் - பட 1); "புரஞ்செற்ற கொற்றச் சேவக னாமங்கள் பாடிப் பாடி" (திருவா - பொற்சு. 16). முன்னினார் - முன்பு சார்ந்தருளினர். தவஞ் செய்தோ மெனவெதிர் கொள்ள - என்பதும் பாடம். |
|
|