நீடு கோபுர முன்பி றைஞ்சி நிலாவு தொண்டரொ டுள்ளணைந் தாடன் மேவிய வண்ண லாரடி போற்றி, யஞ்சலி கோலிநின் றேடு லாமலர் தாவி யெட்டினொ டைந்து மாகு முறுப்பினாற் பீடு நீடு நிலத்தின் மேற்பெரு கப்ப ணிந்து வணங்கினார். | 98 | (இ-ள்.) நீடு...அணைந்து - நீண்ட திருக்கோபுரத்தின் முன்பு வணங்கி நிலை பெற்ற திருத்தொண்டர்களுடனே திருக்கோயிலினுள் சேர்ந்து; ஆடல்...நின்று - ஐந்தொழிற் பெருங்கூத்து இயற்றும் சிவபெருமானது திருவடிகளைத் துதித்துக் கைகூப்பித் தொழுது நின்று; ஏடுலாம்...வணங்கினார் - இதழ்கள் விரிந்த புதிய மலர்களைத் தூவி எட்டு அங்கத்தாலும் ஐந்து அங்கத்தாலும் வணங்கும் முறையினாலே பெருமை நீடிய நிலத்தின்மேல் விருப்பம் பெருகப் பல முறையும் பணிந்து வணங்கினார். (வி-ரை.) நீடுதல் - உயரத்தினாலன்றிச் சிவத்தன்மை காட்டும் பெருமையினாலும் நீளுதல். கோபுரம் முன்பு இறைஞ்சுதல் - கோபுரத்தைத் தூலலிங்கமாகக் கண்டு நிலமுற வணங்கியபின் திருக்கோயிலினுட் புகுதல் வழிபாட்டு முறை. நிலவு தொண்டர் - நிலவுதலாவது அடிமைத் திறத்திற் பிறழாது நிலைபெற்றிருத்தல்; வாழ்வு - தாழ்வு முதலிய எல்லா நிலைகளினும் சலியாது அடிமை செய்தல்; "இடரினுந் தளரினும்" என்ற பிள்ளையாரது திருப்பதிகமும் பிறவும் பார்க்க. ஆடல் - ஐந்தொழில் அருட்கூத்து; பிள்ளையாரது இத்தலப்பதிகம் பார்க்க; நிலையாமைகளையும் கன்ம நிச்சயத்தையும் கூறி உலகரைத் தேற்றிய நம்பிகளது பதிகமும் காண்க. அஞ்சலி கோலி - கைகளை அஞ்சலியாகக் கூப்பி. ஏடுலா மலர்தூவி...பணிந்து - புது மலர்களைத் தூவி நிலமுற வீழ்ந்து அட்டாங்க பஞ்சாங்கமாக வணங்கி; இது வழிபாட்டு முறை. "நின்று மலர்தூவி". பீடு - பெருமை; பீடுநீடு நிலம் - இறைவர் கோயிற் றிருமுற்றமாகும் பெருமையுடைய நிலம்; இஃது ஏனை நிலம் எதற்குமில்லாத சிறப்பு; பெருக - விருப்பம் பெருக என்றும், பலமுறையாகப் பெருக என்றும் இரட்டுற மொழிந்துகொள்க. தொண்டருடன் பணிந்து - என்பதும் பாடம். |
|
|