வம்புநீ டலங்கன் மார்பின் வன்றொண்டர் வன்னி கொன்றை தும்பைவெள் ளடம்பு திங்க டூயநீ ரணிந்த சென்னித் தம்பிரா னமர்ந்த தானம் பலபல சார்ந்து தாழ்ந்து கொம்பனா ராட னீடு கூடலை யாற்றூர் சார, | 100 | (இ-ள்.) வம்பு...வன்றொண்டர் - மணமிகுந்த மாலையினை அணிந்த மார்பினையுடைய நம்பிகள்; வன்னி...தாழ்ந்து - வன்னி, கொன்றை, தும்பை.வெள்ளடம்பு, சந்திரன், தூயநீராகிய கங்கை யிவற்றைச் சூடிய தலையினையுடைய தமது பெருமானாகிய இறைவர் விரும்பி யெழுந்தருளிய பதிகள் பலவற்றையும் சென்று சேர்ந்து வணங்கி; கொம்பனார்...சார - பசுங்கொம்பு போன்ற பெண்களின் ஆடல் மிக்க திருக்கூடலை யாற்றூரினைச் சாரவும்; (வி-ரை.) வம்பு நீடு....வன்றொண்டர் - வம்பு - வாசனை; அலங்கல் - மலர்மாலை; வம்புநீடு - வன்றொண்டர் என்று கூட்டி வன்பு பேசி வழக்கிட்டு ஆட்கொள்ளப்பெற்ற என்றுரைத்தலுமாம்; இப்புராணத்தில் பின்னர் "வம்பெனவாண்டு கொண்டா னொருவனே" (3546) எனவரும் குறிப்பும் காண்க. வன்னி.....அணிந்த சென்னி - இறைவர் சடையிற் சூடிய பொருள்கள் வன்னியிலை முதலியன; வெள்அடம்பு - அடம்பு ஒருவகைச் செடி; தூயநீர் - கங்கை; பதிகள் பல பல சார்ந்து வணங்குதற்கேற்பப் பலவற்றையும் அணிந்த கோலம் பற்றிக் கூறியது தெய்வக் கவிநயம்; "தங்கு கோல மிறைஞ்ச" (3253) என்று முன் குறிப்பும் காண்க. தானம் பலபல - இவை திருப்புறம்பயத்தினின்றும் வடக்கே 11/2 நாழிகையளவில் கொள்ளிடத் திருநதியினைக் கடந்துசென்று கொள்ளிடத்தின் வடகரையிலும் வடக்கே திருமுதுகுன்ற நோக்கிச் செல்லும் இடையிலும் உள்ளவை; கோவந்தபுத்தூர், பழுவூர், கடம்பூர்க்கரக்கோயில், கடம்பை இளங்கோயில், முதலாயின என்பது கருதப்படும். கொம்பனார் - பசிய இளங்கொம்புபோல் அசையுமியல்புடையவர்; "கொம்பனாள் பாகங் குளிர்ந்தார் போலும்" (தேவா). சாரச் - சேரார் (ஆகி) - செல்லும் ஒரு வழி - என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க. சார - அருகாக வர; சாரவும் என்று சிறப்பும்மை விரிக்க. |
|
|