செப்பரும் பதியிற் சேரார் திருமுது குன்றை நோக்கி ஒப்பரும் புகழார் செல்லு மொருவழி யுமையா ளோடு மெய்ப்பரம் பொருளா யுள்ளார் வேதிய ராகி நின்றார் முப்புரி நூலும் தாங்கி நம்பியா ரூரர் முன்பு. | 101 | (இ-ள்.)செப்பரும் பதியிற் சேரார் - சொல்லுதற்கரிய அத்திருப்பதியிற் சென்று சேராராகி; திருமுதுகுன்றை...ஒருவழி - திருமுதுகுன்றத்தினை நோக்கி ஒப்பரிய புகழினையுடைய நம்பிகள் செல்கின்ற அவ்வழியிலே; உமையாளோடு...உள்ளார் - உமையம்மையாருடன் கூடி மெய்ப்பரம் பொருளாகியுள்ளவராகிய சிவபெருமான்; வேதியராகி முப்புரி நூலுந்தாங்கி - வேதியர் வடிவங்கொண்டு முப்புரி நூலினையும் தாங்கிக்கொண்டு; நம்பியாரூரர் முன்பு நின்றார் - அந்நம்பியாரூரது முன்பாக நின்றருளினார். (வி-ரை.) செப்பரும் பதியில் சேரார் - முன் கூறிய அந்தப் பதியில் என முன்னறி சுட்டு வருவிக்க; சேராராகி; சேராமல். திருமுதுகுன்றை நோக்கிச் செல்லும் ஒரு வழியில் - என்க; கூடலையாற்றூர் இடையே இருப்பவும் அங்குச் சென்று வணங்காது செல்லும் அவ்வழியில்; "இவ்வழி போந்த" என்பது பதிகம். உமையாளோடும் மெய்ப்பரம் பொருளாயுள்ளார் - "அருளுடைய பரம்" என்றபடி; உமையாள் - அருள்; உள்ளார் - என்றும் அழியாது உள்ளவர்; சத்து. பதிகம் பார்க்க. வேதியராகி - முப்புரிநூலும் தாங்கி - வேதியராகி என்றது பிழம்பும், புரிநூல் தாங்கி - உரிய அங்கமும் உணர்த்தியபடி; ஆகி - ஆக்கச் சொல் வெளிப்படும் இயல்புணர்த்திற்று; முப்புரிநூல் - வேடம் மேற்கொண்ட செயற்கை குறித்தது; ஆகி - வெளிப்பட்டு. ஒருவழி - ஒப்பற்ற சிவநெறியாகிய பெருவழி என்ற குறிப்புமாம். வன்றொண்டர் + (3264) - புகழார் செல்லும் வழி - உள்ளார் - முன்பு நின்றார் (3255) என இரண்டு பாட்டுகளையும் முடித்துக்கொள்க. உள்ளார் - நின்றார் - முன்னமே யாண்டு நிறைந்து உள்ளவர் ஆயினும் வெளிப்பட்டு நின்றார்.
|
|
|