நின்றவர் தம்மை நோக்கித் நெகிழ்ந்தசிந் தையராய்த் தாழ்வார் "இன்றியா முதுகுன் றெய்த வழியெமக் கியம்பு" மென்னக் குன்றவில் லாளி யாருங் "கூடலை யாற்றூ ரேறச் சென்றதிவ் வழிதா"னென்று செல்வழித் துணையாய்ச் செல்ல. | 102 | (இ-ள்.) நின்றவர்...தாழ்வார் - முன்கூறியவாறு தாம் செல்லும் ஒரு வழியில் நின்றவராகிய இறைவரை நோக்கி நம்பிகள் உருகிய மனத்தினையுடையவராய் வணங்கி; இன்று...என்ன - "இன்று நாம் திருமுதுகுன்றத்தினைச் சென்று சேர்வதற்கு உரிய வழியினை எமக்குச் சொல்லும்" என்று கேட்க; குன்றவில்லாளியாரும்..என்று - மலையை வில்லாக ஏந்திய இறைவரும் கூடலையாற்றூர் ஏற இவ்வழி சென்றது என்று கூறி; செல்வழித்துணையாய்ச் செல்ல - செல்லும் இடத்து வழித்துணையாகத் தாமும் உடன் செல்ல, (வி-ரை.) நின்றவர் - முன் கூறியபடி நம்பிகள் செல்லும் ஒரு வழி அவர் முன்பு நின்ற வேதியர்; நம்பிகளுள்ளும் நின்று தம்மை நோக்கும்படி செய்தவர் என்ற குறிப்புமாம். நெகிழ்ந்த சிந்தையராய் - "நேசமுன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியால்" (186) என்று இவ்வாறு நெகிழ்ச்சியுண்டாதற்குக் காரணத்தை முன் விரித்தவாறுகண்டு கொள்க; வேடம் மாறினும் பொருட்டன்மையின் முன்னைத் தொடர்புபற்றி நெகிழ்ச்சி கிளைப்பதாயிற்று என்க. தாழ்வார் - வணங்குவாராய்; தாழ்தல் - விரும்புதலுமாம். வழி - வழிச்செல்வோராதலின் வழி வினாவினர். கூடலையாற்றூர் ஏற - கூடலை யாற்றூரினைச் சார அதனை அடைந்து அவ்வழியாக. சென்றது இவ்வழி - வழிச்செல்வோரது செல்கை வழியின்மேல் ஏற்றி உரைத்தல் மரபு. செல்வழித் துணையாய் - ஆன்மாக்கள் செல்லும் சென்ம யாத்திரை தோறும் வழித்துணையாகி நீங்காது உடனிருந்து செல்பவர் (மார்க்க சகாயர்) என்ற குறிப்பும் காண்க. "வழிவிடுந் துணைபின் போத வழித்துணை யாகி யுள்ளார்" (418) என்றபடி ஏனையோர் எல்லோரும் வழிவிடுவோரேயாவர்; சிவன் ஒருவரே எப்பிறவியிலும் எந்நாளும் உயிர்களுக்கு நீங்காத வழித்துணை யாவார் என்பது. செல்லத் - தொடர்வார் - காணார் என்று வரும்பாட்டுடன் கூட்டி முடிக்க. |
|
|