பாடல் எண் :3257

கண்டவர் கைகள் கூப்பித் தொழுதுபின் றொடர்வார்க் காணார்
வண்டலர் கொன்றை யாரை "வடிவுடை மழு" வென் றேத்தி
"அண்டர்தம் பெருமான் போந்த வதிசய மறியே"னென்று
கொண்டெழும் விருப்பி னோடுங் கூடலை யாற்றூர் புக்கார்.
103
(இ-ள்.) கண்டவர்...காணார் - முன் கூறியபடி செல்வழித்துணையாய்த் தம்முடன் செல்லக் கண்ட நம்பிகள்அவரைக் கைகூப்பித் தொழுது பின்அவ்வாறு தொடர்வாரைக் காணாராகி; வண்டலர்...ஏத்தி - வண்டுகள் ஊதி மலர்த்தும் கொன்றையினைச் சூடிய இறைவரை "வடிவுடைமழு" என்று தொடங்கித் துதித்து; அண்டர்தம்....என்று - தேவ தேவராகிய இறைவர் "வேடங் காட்டிக்கூட வந்து மறைந்து போயின அதிசயத்தை இன்னதென்றறியேன் என்று கூறிப்பதிகம் பாடி; கொண்டெழும்...புக்கார் - தம்மைப் பற்றிக்கொண்டு மேலெழுகின்ற விருப்பத்தினுடனே திருக்கூடலை யாற்றூரினிற் புகுந்தருளினர்.
(வி-ரை.) தொழுது - வழி அறிவித்தமைக்கும், செல்வழித் துணையாய் உடன்செல்ல ஒருப்பட்டுத் தொடர்ந்த செயலுக்கும் நன்றி செய்யும் முறையிலே தொழுது;
பின் தொடர்வார் - வழித்துணையாய்ச் செல்ல ஒருப்பட்டுத் தொடர்ந்தவரை; இரண்டனுருபு விரிக்க; தொடர்வார் வினைப்பெயர்.
காணார் - சடுதியில் மறைந்து போயினமையாற் காணாராகி; காணார் - ஏத்திப் புக்கார் என்று கூட்டுக; காணார் - முற்றெச்சம்.
கொன்றையாரை - வேதிய வேடங் காட்டிக் கூறி மறைந்தவர் சிவபெருமானே என உணர்ந்தமையால்.
வடிவுடை மழு - பதிகத் தொடக்கமாகிய முதற்குறிப்பு.
அண்டர்தம்...என்று - பதிகக் கருத்தாகிய குறிப்பு; மகுடமுமாம்.
கொண்டெழும் விருப்பினோடும் - புக்கார் - இறைவனார் கூறி மறைந்தருளிய திருவருட் செயலினாற் பற்றிக் கொள்ளப்பட்டு அங்குச் சேரவேண்டுமென்று. எழுந்த பெருவிருப்பினோடும்.