பாடல் எண் :3258

கூடலை யாற்றூர் மேவுங் கொன்றைவார் சடையி னார்தம்
பீடுயர் கோயில் புக்குப் பெருகிய வார்வம் பொங்க
ஆடகப் பொதுவி லாடு மறைகழல் வணங்கிப் போற்றி
நீடருள் பெற்றுப் போந்து திருமுது குன்றி னேர்ந்தார்.
104
(இ-ள்.) கூடலையாற்றூர்...புக்கு - திருக்கூடலை யாற்றூரில் மேவும் கொன்றை மாலை சூடிய நீண்ட சடையினையுடைய இறைவரது பெருமையினாலுயர்ந்த திருக்கோயிலினுள்ளே புகுந்து; பெருகிய...பொங்க - பெருகி எழும் ஆசையானது மேலும் அதிகரிக்க; ஆடகப் பொதுவில்...போந்து - பொன்னம்பலத்ததில் ஆடுகின்ற சத்திக்கின்ற வீரக்கழலை யணிந்த திருவடிகளை வணங்கித்துதித்து நீடுகின்ற திருவருள் விடை பெற்றுச் சென்று; திருமுதுகுன்றில் நேர்ந்தார் - திருமுதுகுன்றத்திற் போய்ச் சேர்ந்தனர்.
(வி-ரை.) பீடு உயர் - "பீடி னாலுயர்ந்தோர்களும்" (தேவா); பீடு - பெருமை.
பெருகிய ஆர்வம் பொங்க - முன்னமே பெருகியுள்ள பெருவிருப்பம் மேன்மேலும் அதிகரிக்க.
ஆடகப் பொது - பொன்னம்பலம்; ஆடகம் - பொன் - இங்கு ஞானமயமான சிற்றம்பலம் என்ற பொருளில் வந்தது; புறத்துப் பொன் மேய்ந்து விளங்குகின்றது அதன் புறத்தோற்றமாகிய குறியீடு.
நீடு அருள் - என்றும் நீடுகின்ற திருஅருள் விடை.
நேர்தல் - சென்று சேர்தல்.