தடநிலைக் கோபு ரத்தைத் தாழ்ந்துமுன் னிறைஞ்சிக் கோயில் புடைவலங் கொண்டு புக்குப் போற்றினர் தொழுது வீழ்ந்து நடநவில் வாரை "நஞ்சி யிடை"யெனுஞ் செஞ்சொன் மாலைத் தொடைநிகழ் பதிகம் பாடித் தொழுதுகை சுமந்து நின்று. | 105 | (இ-ள்.) தடநிலை...இறைஞ்சி - பெரிய நிலைகளையுடைய திருக்கோபுரத்தைக் கும்பிட்டு நிலமுற வீழ்ந்து வணங்கி; கோயில்...வீழ்ந்து - திருக்கோயிலினுள் பக்கத்திற் சுற்றி வலங்கொண்டு உள்ளே புகுந்து துதித்தனராகித்தொழுது நிலமுற விழுந்து எழுந்து; நடநவில்வாரை...பாடி - அருட் கூத்தாடும் இறைவரை "நஞ்சியிடை" என்று தொடங்கும் செஞ்சொல்லாலாகிய மாலைத்தொடையாக நிகழும் திருப்பதிகம் பாடி; தொழுது...நின்று - தொழுது கைகூப்பி நின்று, (வி-ரை.) புடை - உள்ளே திருக்கோயிலின் திருமாளிகையினைச் சூழ்ந்து, போற்றினர் - போற்றினராகி; முற்றெச்சம். நடம் நவில்வார் - கூத்தியற்றுபவர்; ஆடுபவர். கூத்தாவது உலகுக்கருளும் மெய்த்தொழி லைந்து. நவிலுதல் - இயற்றுதல்; நடநவிலுதல் என்பது மரபு வழக்கு; சொல்லுதல் என்றுகொண்டு, தமது கூத்தாடலினாலே உலகுக்கு அறிவுறுத்துதல் என்றலுமாம். இக்குறிப்பினையே பற்றி முன் பாட்டிலும், பொதுவிலாடும் அறை கழல் என்றதும் காண்க. அறைதல் - சொல்லுதல். "நஞ்சியிடை" எனும் - இது பதிகத் தொடக்கமாகிய முதற் குறிப்பு. மாலைத் தொடைநிகழ் - கோவைபடத் தொடுத்த நிலைவிளங்கும்; மாலை - தொடை - இச்சொற்கள் மலர்மாலைக்கும் செய்யுளுக்கும் ஒக்கும். கைசுமந்து - இருகைகளையும் தலைமேலே உயரக்கூப்பி அஞ்சலித்தல் சுமத்தல் எனப்பட்டது. நின்று - பரவும்போது - என்று மேல் வரும் பாட்டுடன் கூட்டுக. தடவரைக் கோபுரம் - என்பதும் பாடம். |
|
|