பாடல் எண் :3260

நாதர்பாற் பொருடாம் வேண்டி நண்ணிய வண்ண மெல்லாங்
கோதறு மனத்துட் கொண்ட குறிப்பொடும் பரவும் போது
தாதவிழ் கொன்றை வேய்ந்தார் தரவருள் பெறுவார் சைவ
வேதியர் தலைவர் மீண்டு "மெய்யில்வெண் பொடி"யும் பாட,
106
(இ-ள்.) நாதர்பால்...போது - இறைவனிடத்திலே பொருள் பெறவேண்டிக் கூடியபடியினை எல்லாம் குற்றமில்லாத மனத்தினுள்ளே கொண்டருளிய உட்குறிப்பினோடும் துதிக்கும்போது; தாதவிழ்...பெறுவார் -இதழ்கள் விரியும் கொன்றைமாலையைத் தரித்த இறைவர் பொருள் தரும்அருளினைப் பெறுவாராகி; சைவ...பாட - சிவவேதியர் பெருமானாகிய நம்பிகள் மீண்டும் "மெய்யில் வெண்பொடி" என்று தொடங்கும் திருப்பதிகத்தினையும் பாடவே,
(வி-ரை.) நாதர்பால்...குறிப்பொடும் பரவும் - பதிகக் குறிப்புப் பார்க்க. "உம்மை நச்சுவார், துஞ்சி யிட்டாற் பின்னைச் செய்வதென்" (1), "ஏத்துவார்க் கம்மை செய்வதென்?" (4), "பாடிப் படைத்த பொருளெலாமுமையாளுக்கோ?" (5) முதலியனவாகப் பதிகப் பாட்டுக் கருத்துக்களின் உட்குறிப்புப் பார்க்க.
நண்ணிய வண்ணம் - வந்து கூடிய நிலைகள்; உட்குறித்த கருத்துக்கள்; மனத்துட் கொண்ட குறிப்பு - தமது விருப்பத்தினைப் புலப்பட வெளியிட்டுக்கூறாது மனத்தினுள்ளே குறிவைத்து.
தர அருள் பெறுவார் சைவ வேதியர் தலைவர் - பொருளினை வேண்டியவாறே தரப்பெறுவாராகி; திருப்பாச்சிலாச்சிராமத்திற் போலத் தர அருள் பெறாமைக் குறிப்பன்றித் தரும் குறிப்புப் பெற்று; சைவ வேதியர் - சிவமறையோர்; தலைவர் - அவர்களுள் உயர்ந்தோர்.
மீண்டும் - தம் உள்ளக் குறிப்புடன் முன் "நஞ்சியிடை" என்ற பதிகத்தினைப் பாடியதனோ டமையாது, மேலும்; இறைவர் தர அருளும் திருவுள்ளக் கிடையினைக் கண்டு மேலும்; "எழுபிறப்பும் எங்கள் நம்பி" என்று தர அருள்பெறும் உரிமைபற்றி வற்புறுத்தி "நம்பி" என்று பாடிய குறிப்புக் காண்க.
மெய்யில் வெண்பொடி - இது பதிகத் தொடக்கமாகிய முதற்குறிப்பு. மெய்யில் வெண்பொடியும் - என்று தொடங்கும் பதிகத்தினையும்; முன் "நஞ்சியிடை" என்று தொடங்கிய பதிகத்தினோடு இதனையும் என்று உம்மை இறந்ததுதழுவிய எச்சவும்மை.
பாட - நல்கிட - என்று மேல் வரும் பாட்டுடன் கூட்டுக.