பாடல் எண் :3261

பனிமதிச் சடையார் தாமும் பன்னிரண் டாயி ரம்பொன்
நனியருள் கொடுக்கு மாற்றா னல்கிட, வுடைய நம்பி
தனிவரு மகிழ்ச்சி பொங்கத் தாழ்ந்தெழுந் தருகு சென்று
கனிவிட மிடற்றி னார்முன் பின்னொன்று கழற லுற்றார்;
107
(இ-ள்.) பனிமதி...நல்கிட - குளிர்ந்த சந்திரனைச் சூடும் சடையினையுடைய இறைவரும் பன்னிரண்டாயிரம் பொன்னை மிகவும் அருள் புரியும் வகையால் கொடுத்தருளினாராக; உடைய நம்பி...கழறலுற்றார் - ஆளுடைய நம்பிகள் ஒப்பற்றெழுந்த மகிழ்ச்சி பொங்க வணங்கி எழுந்து அருகே சென்று கனிவிடமுடைய கண்டத்தார் முன் மேலும் ஒரு செய்தியினைச் சொல்வாராகி;
(வி-ரை.) பனிமதி - பனி - குளிர்ச்சி; தாமும் - நம்பிகள் பாட அதற்கேற்ப இறைவரும் என்று உம்மை எச்சவும்மை.
நனி அருள் கொடுக்கு மாற்றால் - மிகவும் அருள்புரியும் வகையாலே; மிக்க அருளாவது 12000 என்ற தொகையின்அளவுப் பெருக்கம்; அஃதேயன்றி மேலும் அதனை ஆற்றிற் புகப்பெற்றுத் திருவாரூர்க்குளத்தில் அவர் பெறக் கொடுத்தலும்; மாற்று நிறையக் கொடுத்தலுமாகிய மேற்செய்ய நின்ற அருளும் குறித்தது.
அருகு சென்று - பொருள் வேண்டிப் பாடி வணங்கி நின்ற இடத்தினின்றும் பின்னும் அருகு அணைந்து; இடத்தானன்றி மேல் வேண்டிக்கொள்ளும் உரிமைப் பாட்டானும் அருகில் என்ற குறிப்புமாம்.
கனி விடம் - கனி - முதிர்ந்த; களங்கனி போன்ற என்றலுமாம்.
முன் பின்னொன்று - பின் - பின்னும்; உம்மை தொக்கது. முன்னர்ப் பொருள் வேண்டி யுரைத்துப் பெற்றதன் மேலும் ஒரு செய்தி; முன்கேட்டதனுடனேபின்னும் என உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை. முன் பின் - முரண் அணிச்சுவை.
கழற லுற்றாராகி - என முற்றெச்சமாம். கழற லுற்றாராகி - என்ன என மேல் வரும்பாட்டுடன் கூட்டுக.