பாடல் எண் :3262

அருளுமிக் கனக மெல்லா மடியனேற் காரூ ருள்ளோர்
மருளுற வியப்ப வங்கே வரப்பெற வேண்டு" மென்னத்,
தெருளுற வெழுந்த வாக்காற் "செழுமணி முத்தாற் றிட்டுப்
பொருளினைமுழுது மாரூர்க் குளத்திற்போய்க்கொள்க"வென்றார்.
108
(இ-ள்.) அருளும்...என்ன - "தேவரீர் கொடுத்தருளும் இந்தப் பொன்னெல்லாம் அடியேனுக்குத் திருவாரூரில் உள்ளவர்கள் மருளவும் வியப்பவும் அங்கே வரப்பெறவேண்டும் என்று விண்ணப்பிக்க; தெருளுற....என்றார் - இறைவனார் தெளிந்தறியும் படி வானிலே எழுந்த திருவாக்கினாலே செழிப்பையுடைய திருமணிமுத்தாற்றிலே இட்டு இப்பொன் முழுமையினையும் திருவாரூர்க்குளத்தினிற் போய்ப் பெற்றுக் கொள்ளுக" என் றருளிச்செய்தனர்.
(வி-ரை.) அருளும் - கொடுத்தருளிய; கனகமெல்லாம் - 12000 பொன்குவைகள் முழுதும்.
அடியனேற்கு - அங்கே - வரப்பெறுதல் வேண்டும் என்று கூட்டுக.
மருளுற வியப்ப - முன்னர், வரத் தாமதித்தல் கண்டு மருளுதலும், பின்னர்ப் பதிகம் பாடிய அளவில் வரப் பெறுதல் பற்றியும் திருமுதுகுன்றத்தில் ஆற்றினில் இட்டுத் திருஆரூர்க் குளத்தினில் வருதல்பற்றியும் வியப்புறுதலும் பின்னர்ச்சரித நிகழ்ச்சியில் காண்க. அதன் முற்குறிப்பு. அங்கே - திருவாரூரிலே; ஆரூர் உள்ளோர் - பரவையாரும் அவர்மூலம் ஆரூரில் உள்ளார் பிறரும்.
தெருளுற - தெளியும்படி; தெருள் - அறிவு விளக்கம்; வாக்கால் - அசரீரியாகிய தமது ஞானாகாயத் திருமேனியில் எழுந்த அருள் ஒலி வடிவாகிய வாக்கினாலே;
என்றார் - கனிவிட மிடற்றினாராகிய இறைவர் என்ற எழுவாய் முன்பாட்டினின்றும் வருவிக்க.
போய் - ஆரூர்க் குளத்திற் - கொள்க - என்க.