பாடல் எண் :3263

என்றுதம் பிரானார் நல்கு மின்னருள் பெற்ற பின்னர்
வன்றொண்டர் மச்சம் வெட்டிக் கைக்கொண்டு மணிமுத் தாற்றிற்
பொன்றிர ளெடுத்து நீருட் புகவிட்டுப் போது கின்றார்
"அன்றெனை வலிந்தாட் கொண்ட வருளிதி லறிவே"னென்று.
109
(இ-ள்.) என்று....பின்னர் - முன்கூறியபடி தமது பெருமானார் தந்த இனிய திருவருள் வாக்கினைப் பெற்ற பின்பு; வன்றொண்டர்...கொண்டு - வன்றொண்டராகிய நம்பிகள் மச்சம் (பொற்றுண்டம்) வெட்டி யெடுத்துக் கொண்டு; மணிமுத்தாற்றில்...போதுகின்றார் - திருமணி முத்தாற்றிலே பொற்குவியலை எடுத்துநீரினுள்ளே புகப்பெய்து செல்கின்றவர்; "அன்றெனை....அறிவேன்" என்று - அன்று என்னைத் (திருவெண்ணெய் நல்லூரிலே) வலிய ஆட்கொண்ட திருவருளினை இச்செயலில் மெய்ப்பட அறிவேன்" என்று;
(வி-ரை.) நல்கும் இன்னருள் - திருவாக்கு; மச்சம் - பொன்னின் மாற்று ஒப்பு நோக்குதற்கு அக் குவையினின்றும் வெட்டி எடுத்துக் கொள்ளும்சிறு பொற்றுண்டம்; பொன் வினைஞர் அத்துறையில் வழங்கும் மரபுப் பெயர் - வெட்டி - பொற்கட்டியினின்றும் சிறு துண்டம் வெட்டி எடுத்தல் மரபு. இறைவர் தந்தவை பொற்கட்டிகளாக இருந்தன என்பது.
பொன்றிரள் - பொற்றிரள் எனற்பாலது எதுகைநோக்கி இயல்பாய்நின்றது.
புகவிட்டு - புகும்படி இட்டு என்றும், புகும்படி விட்டு என்றும் உரைக்க நின்றது.
போதுகின்றார் - வினைப் பெயர்; போதுகின்றாராகிய நம்பிகள்; போதுகின்றார் - என்று - என்று போந்தார் என மேல் வரும் பாட்டுடன் முடிக்க.
அன்று - முன்னாள்; பண்டறி சுட்டு; திருவெண்ணெய் நல்லூரில் சபைமுன் ஓலைகாட்டித் தடுத்தாட்கொண்ட அன்று என்க;
அருள் இதில் அறிவேன் - அருள் இன்னும் உள்ள தன்மையினை இச்செயல் நிகழ்ச்சியில் தெளிந்துகொள்வேன்.
இதில் - இனி இவ்வாக்கு நிறைவேற அருளும் நிலையினாலே; திருவாக்கின்படி திருவாரூர்க் குளத்தில் இப்பொன்னெல்லாம் தரும் நிலை.
மச்சம்வேண்டி - என்பதும் பாடம்.