பாடல் எண் :3265

மாடுள பதிகள் சென்று வணங்கிப்போய், மங்கை பாகர்
நீடிய கடமபூர் போற்றி, நிறைந்தவா னந்தக் கூத்தர்
ஆடிய தில்லை மூதூ ரணைந்தணி வாயில் புக்குச்
சேடுயர் மாட நீடு செழுந்திரு வீதி சார்ந்தார்.
111
(இ-ள்.) மாடுள...போற்றி - பக்கத்தில் உள்ள பதிகளிற் சென்று இறைவரை வணங்கித் துதித்துச் சென்று உமாதேவியை ஒரு கூற்றில் உடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருக்கடம்பூரினை வணங்கி; நிறைந்த...புக்கு -நிறைந்த ஆனந்தக் கூத்தர் நடஞ் செய்யும் தில்லை மூதூரினை அணைந்து அழகிய நகர் வாயிலினுட்புக்கு; சேடுயர்...சார்ந்தார் - பெருமையினாலுயரும் மாடங்கள் நிலை பெற்று விளங்கும் செழுமையாகிய திருவீதியினைச் சார்ந்தருளினார்.
(வி-ரை.) மாடுளபதிகள் - திருமுதுகுன்றத்தினின்றும் திருத்தில்லை செல்லும் இடையிலும் பக்கங்களிலும் உள்ள பதிகள்.
நிறைந்த ஆனந்தம் என்று கூட்டி ஆனந்தத்தின் முழுமை என்றுரைத்துக் கொள்க. "பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூர ணானந்தமே" (தாயுமானார்).
நிறைந்த - எல்லாப் புவனங்களிலும் நிறைவாகிய; நிறைந்த மூதூர் என்று கூட்டியுரைப்பினு மமையும்; "எப்புவனங் களுநிறைந்த திருப்பதியினெல்லையினையிறைஞ்சி யேத்தி" (1444) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க.
அணிவாயில் - நகரத்தின் திருவாயில்; இது மேற்குத் திருவாயில் என்பது கருதப்படும்; கோயிற்றிருவாயில் மேற்பாட்டிற் கூறப்படும்.
சேடு உயர் மாடம் - தில்லைவாழந்தணர்களும் மடபதிகளும் வாழும் மாடங்களாதலின் சேடுயர் என்றார்; சேடு - பெருமை.
திருவீதி - "மாதவங்க ணல்குந் திருவீதி நான்குந் தொழுது" (2063);
சார்ந்தார் - "சார்புணர்ந்து" (குறள்).
கடம்பூர் - இதன் விவரம் விளங்கவில்லை.
மாடுளபதிகள் - எருக்கத்தம்புலியூர் - முதலாயின என்பது கருதப்படும்.