பாடல் எண் :3266

பொற்றிரு வீதி தாழ்ந்து புண்ணிய விளைவா யோங்கும்
நற்றிரு வாயி னண்ணி நறைமலி யலங்கன் மார்பர்
மற்றதன் முன்பு மண்மேல் வணங்கியுட் புகுந்து பைம்பொற்
சுற்றுமா ளிகைசூழ் வந்து தொழுதுகை தலைமேற்கொள்வார்.
112
(இ-ள்.) நறைமலி அலங்கல் மார்பர் - தேன் மிகும் மாலை தாங்கிய மார்புடைய நம்பிகள்; பொற்றிரு...நண்ணி - அழகிய திருவீதியினை வணங்கிப் புண்ணியத்தின் விளைவாகி ஓங்கி விளங்குகின்ற நல்ல திருவாயிலினைச் சேர்ந்து; மற்றதன்...வணங்கி - அதன் முன்பு நிலமுற விழுந்து வணங்கி; உட்புகுந்து - உள்ளே புகுந்து; பைம்பொன்...கொள்வார் - பசும்பொன் வேய்ந்த இடங்களையுடைய சுற்றுத் திருமாளிகையினைச் சூழ்ந்து வலம் வந்து தொழுது கைகளைத் தலைமேற்கொள்வாராகி,
(வி-ரை.) புண்ணிய...வாயில் - புண்ணியம் - சிவபுண்ணியம்; முன்செய்த அளவில்லாத சிவபுண்ணியங்களின் மேலீட்டினாலே மக்கள் இத்திருவாயிலிற் புகும்பேறு பெறுவர் என்பது கருத்து; "பல்லூழி காலம் பயின்றரனை யர்ச்சிக்கில், நல்லறிவு சற்றே நகும்" என்ற பொருளை ஈண்டு வைத்துச் சிந்திக்க; "வாயி, லப்பதியில் வாழ்பெரியோ ருள்ளம் போல, ஓங்குநிலைத் தன்மையவாயகில முய்ய வுமைபாக ரருள்செய்த வொழுக்க மல்லாற், றீங்குநெறி யடையாத தடையு மாகிச் செந்நெறிக்க ணிகழ் வாய்மை திருந்து மார்க்கந் தாங்குலவநிலவி" (1165) என்று இக்கருத்தை முன் விரித்துரைத்தாராதலின், இங்குப் "புண்ணிய விளைவு" என்றமைந்தார்; இது மேற்குக் கோபுரவாயில் என்று கருதுக.
பைம்பொற் சுற்று மாளிகை - பொன் வேய்ந்தமைந்த இடங்களையுடைய சுற்றுத் திருமாளிகைப் பத்தி. தலைமேற்கொள்வார் - புக்கு இறைஞ்சி - என மேல்வரும் பாட்டுடன் கூட்டுக.
அடங்கல் மார்பர் - அடங்கல் - உரிய அடையாள மாலையாகிய தாமரை மாலை; இறைவரது ஆணையின்படி (273) வேள்வியிற் கொண்ட மணக் கோலத்துடன் சரித்தாராதலின் அதன் குறிப்புமாம்.
நலமலி அடங்கல் - என்பதும் பாடம்.