| 
			
			| | ஆடிய திருமுன் பான வம்பொனின் கோபு ரத்தின் ஊடுபுக் கிறைஞ்சி யோங்கு மொளிவளர் கனக மன்றில்
 நாடகச் செய்ய தாளை நண்ணுற வுண்ணி றைந்து
 நீடுமா னந்த வெள்ளக் கண்கணீர் நிரந்து பாய,
 |  | 113 |  | (இ-ள்.) ஆடிய...இறைஞ்சி - ஆனந்தக் கூத்தர்ஆடும் திருமுன்பாகிய அழகிய பொற்கோபுரத்தின் வழியே உட்சென்று வணங்கி; ஓங்கும்...நண்ணுற - பெருகும் ஒளிவளர்கின்ற பொன்னம்பலத்தில் ஆடுகின்ற சேவடியைச் சார; உள்நிறைந்து...பாய - உள்ளே நிறைந்து நீடுகின்ற ஆனந்த வெள்ளமாகிய கண்ணீர் இரு கண்களினின்றும் விடாது பொழிய, (வி-ரை.) ஆடிய திருமுன்பு - கூத்தப்பெருமானின் நேர் திரு முன்புள்ள; இது நடராசரின் நேர் முன்பாகிய உட்கோபுரம்; கொடி மரம் உள்ள திருவாயில். இதனைத் திருவணுக்கன்றிருவாயில் என்பாருமுண்டு.
 கோபுரத்தின் ஊடுபுக்கு - கோபுர வாயிலின் வழியே உள்ளே புகுந்து; வாயிலும் கோபுரத்தின் அங்கமேயாகி யடங்குதலின் கோபுர வாயிலின் ஊடு என்னாது கோபுரத்தின் ஊடு என்றார்.
 ஒளிவளர் கனகமன்று - ஒளியாகிய இறைவர் வளர்ந்தாடும் பொன்னம்பலம்; "ஓங்குமொளி வெளியேநின் றுலகுதொழ நடமாடும்" (கோயிற் புராணம்.)
 நாடகச் செய்ய தாள் - ஆடும் சேவடி; எடுத்த திருவடி.
 நண்ணுற - அணுகச் செல்ல.
 உள் நிறைந்து....பாய - உள்நிறைந்து பாய - உள்ளே நிறைந்தமையால் மேல் பொங்கி வழிய; வெள்ள - நீர் என்க; நிரந்து - வரிசைப்பட இடையறாது பரவி. பாய்தல் - வழிதல்.
 அம்பொனீள் கோபுரம் - என்பதும் பாடம்.
 | 
 |  |