பாடல் எண் :3268

பரவுவாய் குளறிக் காதல் படிதிருப் படியைத் தாழ்ந்து
விரவுமெய் யங்க மைந்து மெட்டினும் வணங்கி வேட்கை
யுரனுறு திருக்கூத் துள்ள மார்தரப் பெருகி நெஞ்சிற்
கரவிலா தவரைக் கண்ட நிறைவுதங் கருத்திற் கொள்ள,
114
(இ-ள்.) பரவுவாய் குழறி - துதிக்கின்ற வாய் தழுதழுத்துக்குழறி; காதல்.....தாழ்ந்து - பெரு விருப்பம் படியும் திருக்களிற்றுப்படியினை வணங்கி; விரவும்...வணங்கி - மெய் பொருந்திய ஐந்தங்கம் எட்டங்கம் என்ற முறையில் வணங்கி; வேட்கை...பெருகி - பெருகியஆசை வலுப்படத் திருநடனம் மெய்யுணர்வினுள்ளேநிறைந்து மேன்மேலும் பெருகி; நெஞ்சில்...கொள்ள - தமது திருவுள்ளத்தினுள் கரத்தல் இல்லாது வெளிப்பட்டு நின்ற இறைவரைத் திருப்பேரூரிற் கண்ட அக்காட்சி நிறைவாகத் தம் கருத்தில் கொள்ள;
(வி-ரை.) பரவுவாய் குழறி - பரவுகின்ற திருவாய் அவ்வாறு செய்ய இயலாது குழறித் தழுதழுத்து.
காதல்படி திருப்படி - திருக்களிற்றுப் படி; 251ம் பாட்டின் கீழ் இதுபற்றி உரைத்தவை பார்க்க. மி- பக். 295. காதல்படி - பேரன்பு அழுந்தும்; படிதல் - பொருந்திக் கிடத்தல்.
அங்கம் ஐந்தும் எட்டினும் வணங்கி - ஐந்து அங்கம் நிலமுற வணங்குதலும், எட்டு அங்கம் நிலமுற விழுந்து வணங்குதலும் செய்து; இவை முறையே பஞ்சாங்க அட்டாங்க நமக்காரம் எனப்படுவன; இவற்றின் விரிவு முன்னர் உரைக்கப்பட்டது.
வேட்கை உரனுறு - பேரன்பின் வலிமை பொருந்திக் கிடந்த; உரன் - திண்மை - அறிவு, "உரனென்னுந் தோட்டியான்" (குறள் - பரி. உரை.)
நெஞ்சிற் கரவிலாதவர் - ஒருசிறிதும் ஒளிக்காமல் தமது முழு ஆனந்தத்தினையும் உள்ளே நிறைய வெளிப்பட நின்றவர்; "கரவார்பால் விரவாடும் பெருமான்" (தேவா). வேட்கை - பெருகி என இயையும்.
கரவிலாதவரைக் கண்ட நிறைவு - "தில்லை மன்றுணின் றாட னீடிய கோல"த்தை நேர்காணத் திருப்பேரூரில் கண்ட மெய்யுணர்வினுள் நிறைந்த காட்சி அங்குக் கண்ட காட்சியினையே இங்கும் முழுமையும் காணும் நிலை.
கருத்திற் கொள்ளுதல் - மனத்தினுள் நிறைந்து கிடக்கப் பெறுதல்.
அரனுறு - என்பதும் பாடம்.