"மடித்தாடுமடிமைக்க"னென்றெடுத்துமன்னுயிர்கட்கருளுமாற்றால் அடுத்தாற்று நன்னெறிக்க ணின்றார்கள் வழுவிநரகணையாவண்ணம் தடுப்பானைப் பேரூரிற் கண்டநிலை சிறப்பித்துத் "தனிக்கூத்தென்றும் நடிப்பானை நாமனமே பெற்றவா" றெனுங்களிப்பா னயந்து பாடி, | 115 | (இ-ள்.) மடித்தாடும்...எடுத்து - "மடித்தாடும் அடிமைக் கண்" என்று தொடங்கி; மன்னுயிர்கட்கு...சிறப்பித்து - உலகில் உயிர்களுக்கு அருளும் வகையினால் இறைவரை அடுத்துச் செய்யும் சிவநெறியினின்றவர்கள் தவறி இயமன் கைப்பட்டு நரகில் அணையாதபடி சிறப்பித்து; தனிக்கூத்து....பாடி - ஒப்பற்ற தனிக்கூத்தினை ஆடுகின்றவரை மனமே! நாம் கிடைக்கப்பெற்ற பேறுதான் என்னே! என்று பெரு மகிழ்ச்சியினால் விரும்பிப்பாடி, (வி-ரை.) மடித்தாடும் அடிமைக்கண் - இது பதிகத்தொடக்கமாகிய முதற்குறிப்பு; பதிகம் பார்க்க. மன்னுயிர்கட்கு...தடுப்பானை - உயிர்களுக்கு அருள்புரியும் வகையாலே - தடுப்பான் என்று கூட்டுக. அடுத்தாற்றும் நன்னெறிக் கண் நின்றார்கள் - முன்னை வினையின் வழித்தோன்றி அவ்வினைப் பயனை அனுபவித்துக் கழிக்கும் வகையாலே அவ்விதிவழி அறநெறியில் நிற்பவர்கள்; வழுவி - அந்நெறியினின்றும் விலகி - தவிர்ந்து; நரகணையா வண்ணம் - வழுவியதன் காரணமாக நரக லோகம் செல்லும் வழிபோகாதபடி; தடுப்பான் - தடுத்தாட் கொள்பவர்; நம்பிகள் தமது சுயசரித நிலைபற்றி எண்ணித் திருவருளைப் போற்றியகுறிப்பும் கண்டுகொள்க; தமக்குச் செய்த பேர்அருள்கள் எல்லாவற்றிலும் இதுவொன்றே மிகச் சிறந்தது என்பது நம்பிகள் திருவுள்ளத்தினுள் ஊன்றிக் கிடந்த தென்க. நின்றாலும் வழுவினர்கள் என்ற பாடமுமுண்டு. அப்பாடத்துக்கு, அறத்தின் நன்னெறியிலே நிற்பினும் பிறவியில் வந்த வினைப்பயன் துய்ப்பதனோடுஅமையாது புதிது புதிது வினைகளைத் தேடிக்கொள்ளும் வகையால் வழுவியவர்கள் என்றுரைத்துக்கொள்க; இப்பொருட்கு நன்னெறிக்கண் நின்றாலும் என்றதற்கு உலகவிதிப்படி நல்லநெறி சென்றாலும், என்றுரைத்து, நன்னெறி - உலகியல் நெறியாகிய இல்லற முதலிய நிலைகள் என்று கொள்க; ஈண்டு நம்பிகள் புத்தூரில் முயன்ற திருமணம் உலகியலில் நன்னெறியே யன்றித் தீநெறி எனப்படா நிலையும் காண்க; ஆயினும் உயிர், மேலும் பிறவியில் விழுந்துவிடாது ஈடேறும் வகையால் முன்னர் வேண்டிய வரத்தின்படி அது வழுவேயாகி முடிந்து, தடுக்கப்பட நின்ற இயையும் கண்டுகொள்க. தடுப்பானை - தடுத்தாட் கொள்ளும் இறைவரை. பேரூரிற் கண்டநிலை சிறப்பித்து - பதிகம் இறுதிப் பாட்டிற் "பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தே பெற்றாம்" என்பதனை ஆசிரியர் காட்டியருளியபடி. தனிக்கூத்து என்றும் நடிப்பானை - புலியூர்ச் சிற்றம்பலத்தே கண்ட காட்சி. பெற்றவாறு - காணப்பெற்ற பேற்றின் அருமைப்பாடுதான் என்னே! என வியந்தது; "பெற்றாமன்றே" என்ற பதிக மகுடத்தின் பொருள் விரித்துக்காட்டியபடி; களிப்பு - பேரானந்த விளைவு; பெறுதற்கரிய பொருள் பெற்றபோது விளையும் உள்ள நிகழ்ச்சி; நயப்பு - விருப்பம். |
|
|