மீளாத வருள்பெற்றுப் புறம் போந்து திருவீதி மேவித் தாழ்ந்தே ஆளான வன்றொண்ட ரந்தணர்க டாம்போற்ற வமர்ந்து வைகி, மாளாத பேரன்பாற் பொற்பதியை வணங்கிப்போய், மறலி வீழத் தாளாண்மைகொண்டவர்தங்கருப்பறியலூர்வணங்கிச்சென்றுசார்ந்தார். | 116 | (இ-ள்.) மீளாத...தாழ்ந்தே - பிரியாவிடை அருளப்பெற்றுப்புறத்துப்போந்து திருவீதியினை அணைந்து தொழுதே; ஆளான...வைகி - இறைவருக்கு ஆளாயின வன்றொண்டராகிய நம்பிகள், அந்தணர்கள் தம்மைப் போற்ற, விரும்பி அங்குத் தங்கியருளி; மாளாத...போய் - ஒழியாத பேரன்பினாலே அழகிய அத்திருப்பதியினை வணங்கிச் சென்று; மறலி....சார்ந்தார் - இயமன் வீடும் படி தாளாண்மை கொண்ட இறைவரது திருக்கருப்பறியலூரினை வணங்கிப் போய்ச் சார்ந்தருளினர். (வி-ரை.) மீளாத அருள் - பிரியா விடை; மீளாத - அங்கு நின்று பிரிய முடியாத; திருவீதி - "மாதவங்கள் நல்குந் திருவீதி நான்கும்"; கூத்தப்பிரான் திருத்தேரில் எழுந்தருளும் மாடவீதி. அந்தணர்கள் - தில்லைவாழுந்தணர்கள்; அந்தணர்கள் தாம் போற்ற - "பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தே பெற்றா மன்றே" என்ற திருப்பதிகத்தைக் கேட்ட அந்தணர்கள், நம்பிகளை நோக்கித் தில்லைபோல வேறு ஒரு தலமும் உலகில் இலையாயிருப்பவும் பேரூரினை இங்குச் சிறப்பித்த தென்னை? எனவினவ, நம்பிகள் தில்லையம்பலத்திற் போலவே பேரூரில் அரசம்பலத்திலும் கூத்தப்பெருமான் எப்போதும் ஆனந்த நடனம் புரிந்தருளுவர் என்றுரைக்க, அது கேட்டு, அவ்வந்தணர்கள் அங்குச் சென்று அவ்வாறே கண்டு, அழகிய திருச்சிற்றம்பலம் என்றொரு தலத்தையும் தாபித்து வணங்கி மீண்டுவந்தனர் என்பது பேரூர்ப்புராணம்; வன்றொண்டர் அந்தணர்கள் தாம் போற்ற என்பது அக்குறிப்புத் தருவது; வன்றொண்டர் என்ற பேரூர்ப் புராணமும் கருதுக. ஆரூரர் பேரூரை யணைந்திறைஞ்சிப் போய்த்தில்லை நீரூருஞ் சடையாரை நேர்வழுத்தும் பதிகத்திற் "பேரூரர் பெருமானைப் பெற்றா"மென் றிசைத்தமிழ் சீரூருந் தில்லைவா ழந்தணர்தஞ் செவிக்கேட்டார். (1) தம்பிரான் றோழரவர் தமைநோக்கி வினவுவார் "எம்பிரா னமர்தில்லை யித்தலம்போ லொருதலமும் உம்பரார் தொழுமுலகி லுயர்ந்திருப்ப திலையன்றே! நம்பிபே ரூர்ச்சிறப்ப நயந்தெடுத்த தென்?" னென்றார் (2) மாண்டகுணத் தந்தணர்கள் வினவுதலும் வன்றொண்டர் நீண்டமகிழ் வினராகி நிலைமைவர்க் கருள்செய்வார் "ஈண்டுநடம் புரிவதுபோ லெம்பிரான் போதிவனத் தாண்டுமன வரதமுநல் லானந்த நடம்புரியும்" (3) பேரூர்ப்புராணம் - அழகிய திருச்சிற்றம்பலப் படலம் பதியை வணங்கிப் போய் - பதியினை விட்டுப் புறப்படும்போது நகர் எல்லையில் பதியை வணங்கிச் செல்லுதல் சிறந்த மரபு. தாளாண்மை - இரட்டுறமொழிதலால் முயற்சி என்றும், தாளினாலேசெய்த ஆண்மை (உதைத்துருட்டியது) என்றும் கொள்ள வைத்தது கவி நலம். கருப்பறியலூர் வணங்கி - ஊரினைத் தூரத்தே கண்டு வணங்கி; சார்ந்தார் - ஊரினுள் சார்ந்தனர். குறிப்பு - முதன்முறை திருத்தில்லை வழிபாடும் (250 - 253) திருப்பேரூர் வழிபாடும் (3242 - 3245) தனித்தனியே நந்நான்கு பாட்டுக்களால் ஆசிரியர் கூறிய வொற்றுமை நயம் பற்றி முன் (3242 - 3245) உரைக்கப்பட்டது. அதன் பின் ஈண்டு இரண்டாம் முறைத் திருத்தில்லை வழிபாட்டினைப் பேரூரும் தில்லையும் கூடியவாற்றால் ஐந்து (3266 - 3270) திருப்பாட்டுக்களா லருளிய திறமும் கருதத்தக்கது. முன்போலவே இவற்றின் பொருளொற்றுமை நயமுஞ் சிந்தித் துணரத்தக்கது. |
|
|