கூற்றுதைத்தார் திருக்கொகுடிக் கோயி னண்ணிக் கோபுரத்தைத் தொழுதுபுகுந் தன்பர் சூழ ஏற்றபெருங் காதலினா லிறைஞ்சி யேத்தி யெல்லையிலாப் பெருமகிழ்ச்சி மனத்தி லெய்தப் போற்றிசைத்துப் புறத்தணைந்தப் பதியில் வைகிப் புனிதரவர் தமைநினையு மின்பங் கூறிச் சாற்றியமெய்த் திருப்பதிகஞ் "சிம்மாந்" தென்னுந் தமிழ்மாலை புனைந்தங்குச் சாரு நாளில், | 117 | (இ-ள்.) கூற்றுதைத்தார்...புகுந்து இயமனை உதைத்த இறைவரது கொகுடிக் கோயிலினைச் சேர்ந்து திருக்கோபுரத்தைத் தொழுது உள்ளே புகுந்து; அன்பர் சூழ.....எய்த - அன்பர்கள் உடன் சூழ்ந்துவரப் பொருந்திய பெருவிருப்பத்தினாலே வணங்கித் துதித்துஅளவில்லாத பெருமகிழ்ச்சி மனத்தினுட் பொருந்த; போற்றிசைத்து...வைகி - துதி செய்து புறத்திலே வந்தணைந்து அந்தப் பதியினில் தங்கி; புனிதரவர்...புனைந்து - புனிதராகிய இறைவரை நினைந்ததனால் வரும் இன்பத்தை எடுத்துக் கூறிச் சொல்லிய திருப்பதிகம் "சிம்மாந்து" என்று தொடங்கும் தமிழ் மாலையினைப் புனைந்து சாத்தி; அங்குச் சாருநாளில் - அங்குத் தங்கியிருந்த நாள்களில்; (வி-ரை.) கொகுடிக் கோயில் - கொகுடி என்னும் வடிவிலமைந்த கோயில்; கொகுடி - முல்லை விசேடம்; முல்லையினையுடைய கோயில் என்பதுமாம். புனிதர்...கூறி - இது பதிகக் கருத்துக் குறிப்புமாம். நினையும் இன்பம் - இறைவரை நினைத்தலே இன்பந் தருவதாம். "நினைத் தொறும்...எப்போதும், அனைத்தெலும் புண்ணெக வானந்தத் தேன் சொரியும், குனிப்புடையான்" (திருவா.) "அறுசுவை யதனினு முறுசுவை யுடைத்தாய்க், காணினுங் கேட்பினுங் கருதினுங் களிதருஞ், சேணுயர் மருத மாணிக்கத் தீங்கனி" (11-ந் திருமுறை - திருவிடை-மும்-கோ-10). சிம்மாந்து - இது பதிகத் தொடக்கம். |
|
|