கண்ணுதலார் விரும்புகருப் பறிய லூரைக் கைதொழுது நீங்கிப்போய்க் கயல்கள் பாயும் மண்ணிவளம் படிக்கரையை நண்ணி யங்கு மாதொருபா கத்தவர் தாள் வணங்கிப் போற்றி எண்ணில்புகழ்ப் பதிகமு"முன் னவ"னென் றேத்தி யேகுவார் வாழ்கொளிபுத் தூரெய் தாது புண்ணியனார் போம்பொழுது நினைந்து மீண்டு புகுகின்றார் "தலைக்கல"னென் றெடுத்துப் போற்றி; | 118 | (இ-ள்.) கண்ணுதலார்...போய் - கண்ணுதலாராகிய இறைவர் விரும்பி எழுந்தருளிய திருக்கருப்பறியலூரினைக் கைதொழுது வழிபட்டுச் சென்று கயல்கள்........ஏகுவார் - கயல் மீன்கள் பாய்தற்கிடமாகிய நீர்வளமுடைய திருப்பழ மண்ணிப் படிக்கரையினைச் சேர்ந்து அங்கு உமையொரு பாகமுடையவராகிய இறைவரது திருவடிகளை வணங்கித் துதித்து அளவற்ற புகழினையுடைய திருப்பதிகத்தினையும் "முன்னவன்" என்று தொடங்கிப் பாடித் துதித்து மேலே செல்வாராகி; வாழ்கொளிபுத்தூர்...போற்றி - திருவாழ்கொளிபுத்தூரினைச் சேராது புண்ணியனாராகிய நம்பிகள் போகும்போது நினைந்துகொண்டு மீண்டு திரும்பித் "தலைக்கலன்" என்று தொடங்கித் துதித்துக்கொண்டு அங்குப் புகுகின்றாராகி; (இ-ள்.) திருப்பதிகம்...எய்தி - திருப்பதிகம் பாடிப்போய் அப்பதியில் சேர்ந்து; தேவர் பெருமானார்தம்....பணிந்தேத்தி - தேவர் தலைவராகிய இறைவரது திருக்கோயிலின் வாயிலில் திருமேனியில் விளங்கும் மயிர்க்கூச்சுப்பொருந்த வணங்கி உள்ளே அணைந்து பணிந்து துதித்து; உருகும்..போற்றிசைத்து - மலையரசன் மடமகளாரை இடப்பாகத்தில் வைத்த இறைவரைத் துதி செய்து; புறம் போந்து...போது - வெளியே போந்து தங்கியிருந்து அழகிய மெல்லிய கரும்புகளையுடைய அந்தத் திருவாழ்கொளி புத்தூரை நீங்கிச் சென்று திருக்கானாட்டு முள்ளூரினை அணுகியபோது, (வி-ரை.) மண்ணிவளம் படிக்கரை - இது பழமண்ணிப்படிக்கரை என்ற பதி; பழமண்ணி - என்பது மண்ணியாறு முன்னர் ஓடிய வழி. எண்ணில் புகழ்ப் பதிகம் - பதிகத்தின் சிறப்புணர்த்தியபடி; பதிகக்குறிப்பும் பாட்டுக் குறிப்பும் பார்க்க. முன்னவன் - பதிக முதற் குறிப்பாகிய தொடக்கம். வாழ்கொளிபுத்தூர் எய்தாது...போம்பொழுது - நினைந்து மீண்டு புகுகின்றார் - திருக்கருப்பறியலூரினின்றும் மேற்கு நோக்கிப் பழ மண்ணிப் படிக்கரை செல்கின்ற நம்பிகள் இடையில் உள்ள திருவாழ்கொளிபுத்துரினைச் சேர்ந்து வழிபட்டுச் செல்லுதல் மரபும் கடமையு மாதலின்; அவ்வாறு அதிற் சேராது செல்லும் போது நினைவுகொண்டு மீண்டுவந்து சேர்கின்றார். "வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்தென்னினைக்கேனே" என்ற பதிகத்தின் மகுடம் இதன் அகச்சான்றாகும். இவ்வாறே "நீடூர் பணியா விடலாமே" (நம்பி) என்று நினைந்து மீண்டு போந்து திருநீடூரினை வந்து வழிபட்ட வரலாறு இங்கு நினைவு கூர்தற்பாலது. புகுகின்றார் - முற்றெச்சம்; புகுகின்றார் - போற்றி - எய்தி என மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடித்துரைத்துக் கொள்க. தலைக்கலன்- பதிக முதற் குறிப்பு; எடுத்து - தொடங்கி. போற்றி - துதித்தவாறே; "பாடியே" என்று மேற்கூறுதல் காண்க. இப்பதிகம் தலத்தைச் சாருமுன் வழியில் அருளியது; பதிகக் குறிப்பும் பதிக மகுடமும் பார்க்க. புண்ணியனார் - சிவபுண்ணிய விளைவாயுள்ளவர். "முடிவிலாத சிவபோக முதிர்ந்து முறுகி விளைந்ததால்" (வெள். சருக்.2). |
|
|