பாடல் எண் :3273

திருப்பதிகம் பாடியே சென்றங் கெய்தித்
தேவர்பெரு மானார்தங் கோயில் வாயில்
உருப்பொலியு மயிர்ப்புளகம் விரவித் தாழ்ந்தே
யுள்ளணைந்து பணிந்தேத்தி யுருகு மன்பாற்
பொருப்பரையன் மடப்பாவை யிடப்பா லானைப்
போற்றிசைத்துப் புறம்போந்து தங்கிப் பூமென்
கருப்புவயல் வாழ்கொளிபுத் தூரை நீங்கிக்
கானாட்டு முள்ளூரிற் கலந்த போது,
119

(இ-ள்.) எத்திசையும்...வந்து - எல்லாத் திசைகளில் உள்ளோர்களும் தொழுது துதிக்க "மத்தயானை" என்று தொடங்கித் "திருஎதிர்கொள் பாடியினை அடைவோம்" என்கின்ற சித்தநிலையாகிய திருப்பதிகத்தினைப் பாடி வந்து; செல்வமிகும்....அருள் பெற்று - அருட்செல்வ மிகுந்த செழுந்திருக் கோயிலினை வணங்கிச் சேர்ந்து இறைவரைத் திருவடி வணங்கி அப்பதியில் தங்கித் திருவருள் விடை பெற்றுப்போய்; திருவேள்விக்குடியில்...வாழ்ந்தார் - திருவேள்விக்குடியிற் சேர்ந்து முத்தியளிக்கும் சிவபெருமானைத் திருத்துருத்தியினையும் கூட்டி "மூப்பதிலை" என்று தொடங்கும் திருப்பதிகம்பாடித் துதித்து வாழ்வு பெற்றனர்.
(வி-ரை.) பாடியே - பாடிக்கொண்டபடியே.
உருப்பொலியும் - திருமேனி முழுதும் மேல் விளங்கும். இஃது இறைவர் நினைப்பித்தருள மீண்டுவந்து வழிபட்ட அருளிப் பாட்டின் நினைவினால் ஆகியது.
மயிர்ப்புளகம் விரவி - மயிர்க்கூச்செறிதல் பொருந்தி.
பூமென் கருப்பு வயல் - பூத்தபின் பயன்படும் ஒருவகை மெல்லிய கரும்பு.
கலந்த - அருகில் அணைந்த.