பாடல் எண் :3274

கானாட்டு முள்ளூரைச் சாரும் போது
கண்ணுதலர ரெதிர் காட்சி கொடுப்பக் கண்டு
"தூநாண்மென் மலர்க்கொன்றைச் சடையார் செய்ய
துணைப்பாத மலர்கண்டு தொழுதே"
னென்று
வானாளுந் திருப்பதிகம் "வள்வா" யென்னும்
வண்டமிழின் றொடைமாலை மலரச் சாத்தித்
தேனாரு மலர்ச்சோலை மருங்கு சூழ்ந்த
திருவெதிர்கொள் பாடியினை யெய்தச் செல்வார்,
120
(இ-ள்.) கானாட்டு முள்ளூரை...கண்டு (அவ்வாறு) திருக்கானாட்டு முள்ளூரினைச் சேரும்பொழுது கண்ணுதலாராகிய இறைவர் எதிரே காட்சி கொடுத்தருளக் கண்டு; தூநாண்...என்று - தூய்மையான புதிதாகிய மெல்லிய மலராகிய கொன்றையினை யணிந்த சடையினையுடைய இறைவரது செம்மையாகிய துணைப்பாத மலர்களைக் கண்டு தொழுதேன் என்ற கருத்தினைப் புலப்படுத்தி; வானாளும்...சாத்தி - தேவருலகத்தையும் பணிகொள்ளும் தன்மையுடைய "வள்வாய்" என்று தொடங்கும் வளப்பமுடைய தமிழின் தொடைமாலையினை அழகு பொருந்தச் சாத்தி; தேனாரும்...செல்வார் - தேன் பொருந்திய மலர்கள் நிறைந்த சோலைகள் பக்கத்தே சூழ்ந்த திரு எதிர்கொள்பாடியினை மேவச் செல்வாராய்,
(வி-ரை.) சாரும்போது - புறநகரினைச் சார்ந்தபோது; முன்பாட்டில் கலந்த என்றது அணுக வந்த என்றதாம்.
எதிர் காட்சி - நகரினுள்ளே செல்லு முன்னே புறநகரில் எதிர் தோன்றிக் காணக் காட்டும் காட்சி; திருக்கழுமலம், திருப்பனையூர் முதலிய பதிகளின் வழிபாட்டு வரலாறுகள் ஈண்டு நினைவுகூர்தற் பாலன.
"தூநாண்மென்....தொழுதேன்" என்று - இது பதிகக் கருத்தாகிய குறிப்பு; பதிக மகுடம் காண்க.
"வள்வாய்" என்னும் - இது பதிகத் தொடக்கமாகிய முதற் குறிப்பு.
வண்டமிழின் தொடைமாலை மலரச்சாத்தி - பதிகத் திருப்பாட்டுக்களின் சொல் - பொருள் - இசை - அருள் - வளங்கள் குறிக்க வண்மை யுடைய என்றார்; தொடைமாலை - ஒவ்வொரு திருப்பாட்டும் தொடை எனப்படும்; மாலை - அவையனைத்தும் சேர்ந்த நிலை; மலர - விளங்க; சாத்தி - தொடை மாலை என்றதற்கேற்பச் சாத்தி என்றார்; உயர்ந்த தமிழ் இலக்கியப் பண்புகள் இப்பதிகத்துட் காணப்படும்.
துணைப்பாதம் - இரண்டு பாதங்கள்; "உற்றா ரிலாதார்க் குறுதுணையா"கும் பாதம் என்ற குறிப்புமாம்.
வானாளும் திருப்பதிகம் - வானவர்தங்கோனை, உலகம் விழுங்கி யுமிழ்ந்தானை நான்முகத்தினானை, உலகந்தானாய், பூதங்களைந்தாய் எண்குணத்தினானை, நாளை, யின்று, நெருநலாய், தேவர்கள் சூளாமணியை, விண்ணவர்தங்கோனை, அமரர்கடம் பெருமானை, பலவுருவந் தன்னுருவே யாய பெருமானை, மேவியவெந்நரகத்தி லழுந்தாமை நமக்கு மெய்ந்நெறியைத் தான் காட்டும் வேதமுதலானை, - என்றிவ்வாறு பலவும் இறைவரது முழுமுதற்றன்மைகளையும், தேவர் பெருமானாந் தன்மைகளையும் கூறிய நிலைகுறிக்க வானாளும் ‘வானவர்களை ஆட்கொண்டு செலுத்தும்ழு என்றார். திருக்கடைக்காப்பில் "வானவர்க்குந் தலைவராய் நிற்பரவர்தாமே" என்று பதிகப்பயன் கூறியருளியதும் குறிப்பு; வானாளும் - பயின்றாரை வானாளவைக்கும்.