பாடல் எண் :3276

காட்டுநல் வேள்விக் கோலங் கருத்துற வணங்கித் காதல்
நாட்டிய வுள்ளத் தோடு நம்பியா ரூரர் போற்றி
ஈட்டிய தவத்தோர் சூழ வங்குநின் றேகி யன்பு
பூட்டியாட் கொண்டார் மன்னுந் தானங்க ளிறைஞ்சிப் போந்து,
122
(இ-ள்.)காட்டுநல்...வணங்கி - அங்கு இறைவர் காட்டிய நல்ல திருமணக் கோலம் தமது மனத்துட் பொருந்த வணங்கி; காதல்...போற்றி - பெருவிருப்பம் ஊன்றிய உள்ளத்தினோடு நம்பிகள் துதித்து; ஈட்டிய...ஏகி -பல காலம் முயன்று சேர்த்த தவத்தினை யுடைய திருத்தொண்டர்கள் சூழ்ந்துவர அங்கு நின்றும் புறப்பட்டுச் சென்று; அன்பு....போந்து - அன்பினாலே பிணைத்துத் தம்மை ஆட்கொண்ட இறைவர் நிலைபெற எழுந்தருளியுள்ள பதிகளை வணங்கிச் சென்று,
(வி-ரை.) வேள்விக் கோலம் - திருவேள்விக்குடியில் இறைவர் மணவாளக் கோலத்துடன் கல்யாணசுந்தரர் என்ற பெயருடன் உள்ளார்.
கருத்துற - மனத்தில் ஊன்றி அழுந்த.
காதல் நாட்டிய உள்ளம் - பெரு விருப்பம் மிகக் கொண்ட நிலை.
ஈட்டிய தவத்தோர் - பல பிறவிகளில் செய்து சேர்த்த பெருந்தவத்தையுடைய அடியார்கள்; அவ்வாறு சலியாது முயன்ற தவப் பெருந் தொண்டர்களுக்கேயன்றி நம்பிகளைச் சூழ்ந்து வணங்கும் பேறுபெறுதலரிது என்பது குறிப்பு; "மெய்த்தவர் சூழ வலங்கொண்டு" (3243).
அன்பு பூட்டி - ஆட்கொண்டவர் - அன்பினை உளதாகச் செய்து தடுத்தாட் கொண்டவர்: "ஆளாயினி யல்லேனென லாமே" (பதிகம்).
குறிப்பு :- காட்டுநல்...போற்றி ன்ற கருத்தும் வழிபாடு முற்றிய நிலையும் அங்கு முன்பாட்டிற் "பதிக மொழிந்து வாழ்ந்தார்" என்றதனாற் பெற்றமையானும், ஈட்டிய.. .போந்து என்ற, பின் இரண்டடிகளின் பொருள் மேல் வரும் பாட்டில் எஞ்சாத...ஏத்தி என்ற இரண்டடிகளாற் பெறுவதனாலும், இப்பாட்டின்றியே பொருள் தொடர்ந்து செல்லுதலானும், இவ்வொரு பாட்டுக்கென யாப்பு மாறுதல் அமைதியின்மையானும், பிறவாற்றானும் இப்பாட்டு ஐயப்பாடுள்ளவற்றுள் ஒன்றாகுமோ என்று கருத இடமுண்டு.1