பாடல் எண் :3277

எஞ்சாத பேரன்பிற் றிருத்தொண்ட ருடனெய்தி
நஞ்சாருங் கறைமிடற்றா ரிடம்பலவு நயந்தேத்தி
மஞ்சாரும் பொழிலுடுத்த மலர்த்தடங்கள் புடைசூழுஞ்
செஞ்சாலி வயன்மருதத் திருவாரூர் சென்றடைந்தார்.
123
(இ-ள்.) எஞ்சாத...எய்தி - எஞ்ஞான்றும் குறைவுபடாத பேரன் பினையுடைய திருத்தொண்டர்களுடனே கூடிச் சென்று; நஞ்சாரும்...ஏத்தி - விடம் பொருந்திய கரிய கண்டத்தினையுடைய இறைவரது பதிகள் பலவற்றையும் பணிந்து துதித்து; மஞ்சாரும்...அடைந்தார் - மேகங்கள் பொருந்திய சோலைகள் சூழ்ந்த பூந்தடாகங்கள் பக்கங்களிற் சூழ்கின்ற செந்நெல் வயல்கள் மிகுந்த மருத நிலங்களையுடைய திருவாரூரினைச் சென்று அடைந்தார்.
(வி-ரை.) எஞ்சாத பேரன்பு - எக்காலத்தும் எவ்வாற்றானும் குறைவுபடாது மேன்மேல் மிகுகின்ற பேரன்பு; இறைவரிடமும் நம்பிகளிடமும் பேர் அன்புடைய திருத்தொண்டர்கள்.
இடம்பல - இவை, திருஅழுந்தூர், திருவழுவூர், திருமீயச்சூர், திருத்திலதைப் பதிமுற்றம், திருஅம்பர்மாகாளம், திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில், திருக்கொண்டீச்சுரம், திருவிற்குடி, திருப்பள்ளியின் முக்கூடல் முதலாயின என்பது கருதப்படும். நம்பிகள் நீண்டநாள் யாத்திரை போந்தருளியமையாலும், திருவாரூர் மேற்செல மனம் வைத்த ஆர்வத்துடன் வருகின்றமையாலும் திருவேள்விக்குடியினின்றும் தெற்கு நோக்கிச் செல்லும் நேர்வழியிடையிலும் வழியணிமையிலும் உள்ள பதிகளாகிய இவற்றைக் கொண்டுரைக்கப்பட்டது; இவைகட்கு நம்பிகள் பதிகங்கள் கிடைத்தில!
__________________________________________________
1. எனது சேக்கிழார் பக். 216 பார்க்க.
மஞ்சாரும்....வயன்மருதம் - திருவாரூரின் நீர்வளம் நிலவள முதலிய சிறப்புக்கள்; நம்பிகளின் ஆர்வ மிகுதியினையும் திருவுள்ளத் தெழுந்த இனிய செழுங் கருத்துக்களையும் குறிக்கும் நிலை கண்டுகொள்க.
மஞ்சாரும் பொழிலுடுத்த - "அன்றின் முட்டா தடையும் சோலை யாரூர்" "செந்தண் பவளந் திகழுஞ் சோலை" "தினைத்தா ளன்ன செங்கா னாரை சேரும் திருவாரூர்" "ஆயம் பேடை யடையும் சோலை யாரூர்" "செருந்தி செம்பொன் றிகழுஞ் சோலை" (ஆரூர் - செந்துருத்தி) என்று பின்னர் இவ்வாறே பன்னாட் பிரிந்த "எல்லையிலாக் காதன்மிக" (3278) அணையும்போது நம்பிகளது மனத்தெழும் கருத்துக்களை இங்கு வைத்துக் காணும்படி அவரது திருவுள்ளத்துட் புகுந்து காட்டியருளிய ஆசிரியரது தெய்வக் கவிநலம் கண்டனுபவிக்கத்தக்கது.
பொழிலுடுத்த மலர்த்தடங்கள்...மருதம் - மேகங்கள் சோலைகளைச் சூழ்வன; சோலைகள் மலர்த் தடங்களை உள்ளடக்கி வைத்து அவற்றைச் சூழ்வன; அத்தடங்கள் தாமும் பலபுறமுமிருத்தலால் வயல்களைச் சூழ்வது; அவ்வாறுள்ள வயல்கள் மிக்க மருதம் திருவாரூர் நகரைச் சூழ்வது என்றிவ்வாறு முறையே பலவற்றையும் ஒருங்கு கண்டுகொள்க. உடுத்தல் - சூழ்தல்.