செல்வமலி திருவாரூர்த் தேவரொடு முனிவர்களும் மல்குதிருக் கோபுரத்து வந்திறைஞ்சி யுள்புக்கங் கெல்லையிலாக் காகன்மிக வெடுத்தமலர்க் கைகுவித்துப் பல்குதிருத் தொண்டருடன் பரமர்திரு முன்னணைந்தார். | 124 | (இ-ள்.) செல்வமலி...இறைஞ்சி - செல்வ நிறைந்த திருவாரூரிலே தேவர்களுடனே முனிவர்களும் நெருங்கியுள்ள திருக்கோபுரத்தினை அணுகி வந்து வணங்கி; உள்புக்கு - திருக்கோயிலினுள்ளே புகுந்து; அங்கு..கைகுவித்து - அங்கு அளவில்லாத காதல் மிகுதியினாலே சிரத்தின் மேலே கைகளைக் கூப்பி; பல்கு..அணைந்தார் - மிகுந்த திருத்தொண்டர்களுடனே கூடி இறைவரது திருமுன்பு அணைந்தருளினர். (வி-ரை.) செல்வமலி திருவாரூர் - நிறை செல்வத் திருவாரூர் என விதந்து பேசப்படும்; இங்குச் செல்வம் என்றது உலகத்திருவும் முத்தித் திருவுமென்னும் இரண்டையுங் குறித்தது. 86-வது பாட்டுப் பார்க்க; திருஆர்ஊர் என ஊர்ப் பெயரை விளக்கியபடியுமாம். தேவரொடு முனிவர்களும் மல்குதிருக்கோபுரம் - "தேவரொதுங்கத் திருத்தொண்டர் மிடையுஞ் செல்வத் திருவாரூர்" - தேவாசிரியன் என்பன முதலியவை காண்க; திருத்தொண்டர்களன்றி ஏனையோர் உள்ளே புகும் காலம் பார்த்து நந்திபெருமானது ஆணையை எதிர் நோக்கித் திருவாயிலில் முறையிருப்பர் என்பது. பல்கு திருத்தொண்டருடன் - இவர்கள் அங்குத் திருக்கோயிலிற் குழுமியிருக்கும் திருத்தொண்டர்கள். முன் "எஞ்சாத பேரன்பிற் றிருத்தொண்டருடன்" (3277) என்றது வேறு; அவர்கள் முன் நம்பிகளுடன் கூடிவந்தணைந்தோர். பரமர் - புற்றிடங்கொண்ட பெருமான்; வரும் பாட்டுப் பார்க்க. |
|
|