பாடல் எண் :3279

மூவாத முதலாகி நடுவாகி முடியாத
சேவாருங் கொடியாரைத் திருமூலட் டானத்துள்
ஓவாத பெருங்காத லுடனிறைஞ்சிப் புறம்போந்து
தாவாத புகழ்ப்பரவை யார்திருமா ளிகைசார்ந்தார்.
125
(இ-ள்.) மூவாத....கொடியாரை - எஞ்ஞான்றும் மூத்தல் இல்லாத முதலும் நடுவும் ஆகி முடிதலு மில்லாதவராகிய இடபம் நிறைந்த கொடியினையுடையவரை; திருமூலட்டானத்துள்....இறைஞ்சி - திருமூலத்தானத்தினுள் ஒழியாத பெருவிருப்பத்தினுடன் வணங்கி; புறம்போந்து - புறத்தே போந்தருளி; தாவாத...சார்ந்தார் - கெடுதலில்லாத புகழினையுடைய பரவையம்மையாரது திருமாளிகையினைச் சார்ந்தருளினர்.
(வி-ரை.) மூவாத......முடியாத - இறைமைக் குணங்கள்; மூத்தல் - காலக்கோட்பட்டுப் பழமையாதல்; முடிதல் - இறத்தல்; முதல் - முதல்வன்; நடுவாகி - எல்லாப் பொருள்களுள்ளும் உயிர்களுள்ளும் கலந்திருக்கும் நிலை நடு எனப்பட்டது.
திருமூலட்டானத்துள் - என்றும் எங்கும் உள்ள இறைவரைத் திருமூலட்டானத்துள் வெளிப்படக் கண்டு என்க; திருமூலட்டானம் - புற்றிடங்கொண்ட பெருமான் எழுந்தருளியிருக்கும் இடம்; திருமூலட்டானத்து இறைவரை என்னாது இறைவரைத் திருமூலட்டானத்துள் என்றது எங்கும் நிறைந்த பரமசிவமாகிய இறைவர் ஒருவரே இங்குத் திருமூலட்டானத்துள்ளும், அங்குத் திருமுதுகுன்றத்தினும், மற்றும் அங்கங்குப் பதிகளிலும், குறிகளிலும்,கோயில்களிலும் எழுந்தருளியிருப்பவர் என்ற குறிப்புப் பெறும் பொருட்டு; திருமுதுகுன்றத்திற் பெற்று ஆற்றில் விடுத்த பொன்னினை இங்கு இறைவரருளால் இனிக் குளத்திலெடுக்கவுள்ள நிலையாதலின் அது குறிக்க இவ்வாற்றாற் கூறினார். இனி இங்குத் திருவாரூரில் அருளும் பதிகமும் திருமுதுகுன்றினைப் பற்றியதாதலும் கருதுக.
திருமூலட்டானம் - வேறு; வீதிவிடங்கராகிய தியாகேசர் சந்நிதி வேறு.
ஓவாத - ஓவுதல் - நீங்குதல்; "ஓவுத லோவு திருப்பணி"; "ஓவுநாள்."
இறைஞ்சிப் புறம்போந்து....அணைந்தார் - ஒரு திருப்பதியினை அணைந்தவுடன் முதலிற் செய்யும் கடமையாக இறைவர் கோயிலையடைந்து வணங்கிய பின்னரே தமது ஏனைச் செயல்களுட் புகுதல் முந்தையோராகிய பெரியோர் நிலை; சிவபாத இருதயர் திருவாலவாயிற் சேர்ந்ததும் ஆலவாயுடையாரைச் சென்று வணங்கிய பின்னரே பிள்ளையாரது திருமடத்திற் சார்ந்ததும், பிறவும் இங்கு நினைவுகூர்தற்குரியன. இதனை விடுத்து இந்நாள் மாக்கள் ஒரு பதியினை அணைந்தபோது, தமது பிற காரியங்களையெல்லாம் முதலிற் செய்த பின்னரே கோயிலிற் சேர்தலும் அவ்வாறும் செய்யாதொழிதலும் வருந்தத் தக்கன.
தாவாத புகழ் - பின்னர்ப் பரமனார் இருமுறை தூது சென்ற புகழ்; புகழ் என்பதைப் பரவையாருக் கன்றித் திருமாளிகைக்குங் கொள்ளலாம். பரவையார் திருமாளிகைக்குத் ‘தாவாத புகழ்’ என்பது தாவுதலைத் தடுப்பாரெவர்? என்ற குறிப்புடன் நின்றது. 90-3516 - பாட்டுக்கள் பார்க்க.