பாடல் எண் :3280

பொங்குபெரு விருப்பினொடு புரிகுழலார் பலர்போற்றப்
பங்கயக்கட் செங்கனிவாய்ப் பரவையா ரடிவணங்கி,
"யெங்களையு நினைந்தருளிற்" றென்றியம்ப, வினிதளித்து
மங்கைநல்லா ரவரோடு மகிழ்ந்துறைந்து வைகுநாள்.
126
(இ-ள்.) பொங்குபெரு....அடி வணங்கி - மேன்மேல் அதிகரிக்கும் பெருவிருப்பத்தினுடனே பின்னிய புரிந்த கூந்தலையுடைய தோழியர்கள் பலரும் துதிக்கத் தாமரை மலரைப் போன்ற கண்களையும், கொவ்வைச் செங்கனி போன்ற வாயினையுமுடைய பரவையம்மையார் வந்து (நம்பிகளது) திருவடிகளில் வணங்கி; எங்களையும்...இயம்ப - எங்களையும் நினைந்து எழுந்தருளிய தேவரீரது கருணைக்கு யாம் தகுதியுடையோமா என்று கூற; இனிதளித்து...வைகுநாள் - அவருக்கு இனிய மொழியுரைத்து மங்கைநல்லாராகிய அவருடனே மகிழ்ச்சியுடன் வதிந்திருக்கு நாளிலே,
(வி-ரை.) புரிகுழலார் - தோழியர்கள்.
விருப்பினுடன் - போற்ற என்றும், விருப்பினுடன் - அடிவணங்கி - இயம்ப என்றும் கூட்டியுரைக்க நின்றது.
எங்களையும் நினைந்தருளிற்று - சிவபெருமானையே நினைத்தலன்றி வேறு நினையாத திருவுள்ளத்தில் நினைக்கத் தகாத எங்களையும் என உம்மை இழிவு சிறப்பும்மை; அருளிற்று - எழுந்தருளியது; அருள் துணைவினை எனக்கொண்டு, நினைந்தெழுந்தருளியது என்றலுமாம். நீண்ட நாட்பிரிந்த நிலைக்குறிப்பும் படக் கூறியது.
இனிது அளித்து - மலர் முகம் அளித்து இனியன கூறி.
மங்கை நல்லாரவர் - மங்கையருள் நல்லாராகிய அவர்; பரவையம்மையார்.
வைகுநாள் - புகல - என மேல் வரும் பாட்டுடன் கூட்டுக.
அங்கயற்கண் - என்பதும் பாடம்.