பாடல் எண் :3281

"நாயனார் முதுகுன்றர் நமக்களித்த நன்னிதியந்
தூயமணி முத்தாற்றிற் புகவிட்டேந்; துணைவரவர்
கோயிலின்மா ளிகைமேல்பாற் குளத்திலவ ரருளாலே
போயெடுத்துக் கொடுபோதப் போதுவா"
யெனப்புகல,
127
(இ-ள்.) வெளிப்படை; "தலைவராகிய திருமுதுகுன்றத்தில் எழுந்தருளிய சிவபெருமான் நமக்கு அருளிய நன்னிதியமாகிய பொன்னினைத் தூய திருமணிமுத்தாற்றிலே புகும்படி இட்டோம்; அதனைத் துணைவராகிய அப்பெருமானது இத்திருக் கோயிலின் மாளிகையின் மேல்பாலுள்ள (கமலாலயத்) திருக்குளத்திலே அவர் திருவருளாலே போய் எடுத்துக்கொண்டு வருதற்குஉடன் போதுவாயாக!" என்று (நம்பிகள்) சொல்ல.
(வி-ரை.) நாயனார் முதுகுன்றர் - நாயனாராகிய திருமுதுகுன்றத்து இறைவர்; பெயரடைமொழி பண்பு குறித்து நின்றது; நாயனார் - தலைவர்; 759 - 774 முதலியவை பார்க்க.
யனார் - அளித்த - நாயனாராதலின் - அடியாரைக் காக்கும் கடமை பற்றி அளித்த என்று காரணப் பொருள்பட நின்றமையும் காண்க.
நன்னிதியம் - அசுத்த மாயாபுவன போகவகைப் பொருளாயினும் இறைவர் பாற் பெறும் அருட் பண்டமாதலின் நன்மை யுடையதாம் என்பது; "அறத்தாற்றி னீட்டப்பட்ட; அனையவை புனிதமான திறத்தாலே" (திருவிளை -புரா. வாதவூ-உ. ப. படலம் 62.)
புக இட்டோம் - புகும்படி ஆற்றில் இட்டோம். புக - அங்கு நின்றும் இங்குப் புகும்படி, விட்டோம் என்று பிரித்துரைப்பினுமமையும்.
துணைவரவர் கோயில் மாளிகை - பூங்கோயிலின் மாளிகை; துணைவரவர் - திருமுதுகுன்றத்தின் நாயனார்; இங்குத் திருவாரூர்ப் புற்றிடங்கொண்டார் எழுந்தருளும் பூங்கோயிலைத் திருமுதுகுன்றத்து நாயனாரது கோயிலாகக் கூறியது அவரே இவர்; எங்கும் நிறைந்த முதல்வர் என்ற அனுபவ நிலை; அவரருளாலே என்ற கருத்துமது; அவரருளாவது திருமுதுகுன்றில் நம்பிகள் வேண்டியவாறே இறைவர் "செழுமணி முத்தாற் றிட்டிப் பொருளினை முழுது மாரூர்க் குளத்திற் போய்க் கொள்க" என்று தம்பிரானார் நல்குமின்னருள் (3263); அவ்வாற்றாற் பொன் முழுதும் நம்பிகளின் கைப் புகுமளவும் திருமுதுகுன்றரின் அருட்கடமைப் பாடாதல் நியமமாம் என்ற குறிப்பும் கண்டுகொள்க.
மேல்பாற்குளம் - இது கமலாலயம் என்று விளக்கமாய் வழங்கப்படுவது; இதுபற்றி நமிநந்தியடிகணாயனார் புராணத்தும், பிறாண்டுப் பார்க்க.
கொடுபோத - கொண்டு வர; போதுவாய் - உடன் செல்வாயாக என்ற ஏவல்.
நமக்களித்த - நமக்கு என்றது பரவையாரை உள்ளிட்ட உளப்பாட்டுத் தன்மைப் பன்மை; மேல்வரும் பாட்டில் "என்னுடைய நாதன்" என்றும், "உனக்குத் தருவது" என்றும் தனிப்படுத்தி ஒருமையிற் கூறுதலின் காரணம் மேற்காண்க.
புகல - விளம்ப - என்று - இறைஞ்சி - அணைந்தார் - என மேல்வரும் பாட்டுக்களுடன் கூட்டி முடிக்க.