பாடல் எண் :3282

"என்னவதி சயமிதுதா? னென்சொன்ன வா?" றென்று்
மின்னிடையார் சிறுமுறுவ லுடன்விளம்ப, மெய்யுணர்ந்தார்
"நன்னுதலா! யென்னுடைய நாதனரு ளாற்குளத்திற்
பொன்னடைய வெடுத்துனக்குத் தருவதுபொய் யா"தென்று,
128
(இ-ள்.) மின்னிடையார் - அதுகேட்ட மின்போலும் இடையினை உடைய பரவையம்மையார்; என்ன...என்று - இதுதான் என்ன அதிசயம்! சொல்லியவாறுதான் என்னே! என்று அற்புதத்துடன்; சிறுமுறுவலுடன் விளம்ப - புன்முறுவலுடன் நம்பிகள் "நல்லநுநதலினை யுடையவளே! என்னுடைய நாயகனாரது திருவருளாலே இக்குளத்தினிலே பொன் முழுதும் எடுத்து உனக்கு நான் தருவது பொய்யாகாது"என்று கூறி,
(வி-ரை.) "என்ன...வாறு" என்று - இது பரவையார் அதிசயப் பட்டுக் கூறிய மொழி. இஃதியலாதென்ற குறிப்புடன் கூறிய ஐயப்பாடு புலம்படும் மொழியுமாம்; என்ன அதிசயம்? என்சொன்னவாறு?- வினாக்கள் அதிசயமும்இயலாமைக் குறிப்பும்பட நின்றன. என் செய்தவாறு என்பது பாடமாயின் நீர்பொன்னை ஆற்றிலிட்டது தக்கதன்று என்ற குறிப்புப்பட உரைத்தமொழி என்க.
சிறு முறுவல் - இகழ்ச்சிக் குறிப்புத் தோன்ற நின்ற புன்முறுவல்; இக்கருத்துப் பதிகத்துட் காண்க. மேல் 3286-3287-ல் ஆசிரியர் இதனைக் காட்டியருளியதும் காண்க; "பரவையிவ டன்முகப்பே" (பதிகம்).
மெய்யுணர்ந்தார் - மெய் - இறைவர் - சத் - மெய் - முழுதுமாகும் தன்மையினை;
என்னுடைய நாதன் - உனக்குத் தருவது - என்னுடைய என்றது பரவையார் என் சொன்னவாறு? என்ன அதிசயம்? என்று இறைவரருளினில் ஐயப்பாடுடையார் போற் கூறியதனால் பிரித்துக் காட்டியபடியாம்; முன்னர் நமக்களித்த நன்னிதியம் என்ற நம்பிகள் இங்கு எடுத்து உனக்குத் தருவது என்று பிரித்து உரைப்பதும் அக்கருத்தாதலுடன் ஐயப்பாடு கொண்ட நீயே உன் கையில் ஏற்று அடியார்களுக்குப் பங்குனி உத்திரத் திருவிழாவில் அமுதூட்டி உபசரிக்கும்படி தருவது; நீயே காணும்படி - என்ற குறிப்புமாம்.
பொய்யாது - உறுதி; நிச்சயம் என்றபடி எதிர்மறை உறுதி குறித்தது.
பொன் அடைய - ஒன்றும் குறையாமல் 12000 பொன் முழுமையும்; மாற்று - உரை - சிறிதும் தாழாமலும் என்றலும் குறிப்பு; 3290 - 3291 பார்க்க. அடைய - பொன்னை நீ அடையும்படி; பெறும்படி என்றும், பொன் பெற்றுப் பயனடைய என்றும், முதுகுன்றத்தில் அடைந்தது போல இங்கு அடைய - பெற - என்றும் கொள்ள நின்றது.