பாடல் எண் :3283

ஆங்கவரு முடன்போத வளவிறந்த விருப்பினுடன்
பூங்கோயி லுண்மகிழ்ந்த புராதனரைப் புக்கிறைஞ்சி,
ஓங்குதிரு மாளிகையை வலம்வந்தங் குடன்மேலைப்
பாங்குதிருக் குளத்தணைந்தார் பரவையார் தனித்துணைவர்.
129
(இ-ள்.) ஆங்கு அவரும் உடன் போத - ஆங்குத் தம்முடன் அப்பரவையாரும் வர; அளவிறந்த...வலம் வந்து - அளவு கடந்த விருப்பத்துடன் பூங்கோயிலினுள் மகிழ்ந்தெழுந்தருளியுள்ள புனிதராகிய இறைவர் திருவடிகளை அக்கோயிலுட் புகுந்து வணங்கி ஓங்கிய திருமாளிகையினை வலமாகச் சுற்றி வந்து; பாவையார் தனித் துணைவர் - பரவையாருடைய தனித் துணைவராகிய நம்பிகள்; அங்கு...அணைந்தார் - அவ்விடத்தினின்றும் உடனே மேலைப்பக்கத்திலுள்ள கமலாலயத் திருக்குளத்தில் அணைந்தருளினர்;
(வி-ரை.) ஆங்கு - குளத்திற் என்று இடக்குறிப்பும் அப்பொழுதே என்று காலக் குறிப்பும், அவ்வாறே என்று பண்புக் குறிப்பும்பெற நின்றது.
அவரும் - ஐயப்பட்ட பரவையாரும்; உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை.
அளவிறந்த விருப்பினுடன் - என்றதனைப் புக்கிறைஞ்சி என்றதனுடனும், வலம் வந்து என்றதனுடனும், அணைந்தார் என்றதனுடனும் தனித்தனிக் கூட்டியுரைத்துக் கொள்க. முதனிலைத் தீபம்.
புக்கிறைஞ்சி - வலம் வந்து - அணைந்தார் - "அவனருளாலல்லது ஒன்றையும் செய்யானாக", "ஏகனாகி யிறைபணி நிற்க" என்ற சிவஞான போதம் பத்தாஞ் சூத்திரக் கருத்துக்கள் ஈண்டு வைத்துச் சிந்திக்கற்பாலன. "அவரருளாலே போயெடுத்துக் கொடு போத" (3281) என்றும், "என்னுடைய நாதனருளாற் குளத்தில் எடுத்து உனக்குத் தருவது" (3282) என்றும் முன் கூறியவையும் காண்க. நம்பிகள் தற்போத முனைப்பென்பது சிறிதுமின்றி இறைவன் றிருவருளிலே நீங்காது கலந்து நின்று அதனால் மும்மலவாதனையும் நீங்கிய பரமாசாரியர் என்பது ஈண்டு மனங்கொளற்பாலதாகிய உண்மை; இதனை ஆசிரியர் அங்கங்கும் நம்பிகளது அருட் செயல்களில் வைத்து விரித்துக் காட்டும் தெய்வக் கவிநலம் கண்டுகொள்க.
உடன் - வலம் வந்த உடனே; உடன் - அணிமையில் உள்ள என்றலுமாம்.
மேலைப்பாங்கு - மேற்குப் பக்கத்திலுள்ள; ஏழனுருபு தொக்கது; பாங்கு என்றார் திருக்கோயிலினை அடுத்து உள்ள நிலை குறித்தற்கு; திருக்கோயிலுக்கும் திருக்குளத்துக்குமிடையே ஒரு திருவீதிதான் இப்போது காணப்படுவது.
பரவையார் தனித் துணைவர் - பரவையார் இங்கு நேரே உடனிருக்கஇவ்வாறு கூறுதல் அவரது ஐயப்பாடு நீக்கித் திருவருளுக் காளாந்தன்மை புலப்படுத்தி ஆட்கொள்ளும் ஆசாரியராம் தன்மைப் பெரு நலம் குறித்தற் கென்க; தனி என்ற குறிப்புமிது. பொன்னைத் தாமே சென்றெடுத்துத் தரலாமாயினும் நம்பிகள் அவரையும் "உடன் போதுவாய்" என்று கூட்டிச்சென்ற குறிப்பு மிதுவே என்க; பிறர் பிறவா றெல்லாமெண்ணி அபசாரப்படுதல் உண்மையறிவில்லாமையாலா மென்க; இது பற்றிய மேல் அருட் சரித விளைவு வரலாறும் காண்க; துணைவர் என்ற குறிப்பும் கருதுக; தனித் துணைவர் - தம்மையடைந்த அடியார்கள் யாவர்க்கும் நல்லாறு செலுத்தும் துணைவரே யாயினும், பரவையாருக்குச் சிறப்பாகிய துணைவர் என்பது.
புராதனர் - கால எல்லை கடந்த பழமை; "முன்னோ பின்னோ" என்ற திருத்தாண்டகக் கருத்துக் காண்க.
புனிதர் கழல் - என்பதும் பாடம்.