மற்றதனில் வடகீழ்பாற் கரைமீது வந்தருளி முற்றிழையார் தமைநிறுத்தி முனைப்பாடித் திருநாடர் கற்றைவார் சடையாரைக் கைதொழுது குளத்திலிழிந் தற்றைநா ளிட்டெடுப்பார் போலங்குத் தடவுதலும், | 130 | (இ-ள்.) மற்றதனில்...வந்தருளி - அக்குளத்தின் வடகிழக்குப் பக்கம் உள்ள கரையின்மேல் வந்தருளி; முற்றிழையார் தமை நிறுத்தி - பரவையாரை நிறுத்தி; முனைப்பாடித் திருநாடர் - திருமுனைப்பாடி நாடராகிய நம்பிகள்; கற்றைவார்...தடவுதலும் - கற்றையாகிய நீண்ட சடையினையுடைய சிவபெருமானைக்கைதொழுது திருக்குளத்தினுள்ளே இறங்கி அன்று அப்போதுதானே போகவிட்டு எடுப்பவர்போல அங்குத் தடவுதலும், (வி-ரை.) "வடகீழ்பாற் கரையின்மீது - இது திருக்கோயிலினின்றும் நம்பிகள் போந்தருளிய மேலைத் திருவாயிலுக்கு அணிமையில் உள்ளது; ஈசானனுக்குரிய வடகிழக்காகிய பெருமையும் உடையது; இங்கு மாற்றுரைத்தபிள்ளையார் என்று இச்சரித சம்பந்தமாகிய பெயருடன் பிள்ளையார் கோயில் உள்ளதும் காணலாம். முற்றிழையார் - தொழில் நிரம்பிய அணிகளை அணிந்த பரவையம்மையார்; தொழில் முற்றிய இழை; வினைத்தொகை. கற்றைவார் சடையாரைக் கைதொழுது - திருவருள் வெளிப்பட உள்ள பெருஞ் செயலிற் புகுகின்றாராதலின் இறைவரைத் தொழுதுபுகுகின்றார். இஃது எஞ்ஞான்றும் சிவனை மறவாது தம் செயலற்ற பெரியோர் நிலை - "தழைத்த வஞ்செழுத் தோதினார் ஏறினார் தட்டில்" (544); "கைதொழுது நடமாடுங் கழலுன்னியழல்புக்கார்" (1072); "அஞ்செழுத் தோதிப் பாற்ற டம்புனற் பொய்கையில் மூழ்கினார் பணியால்" (1635) என்பன முதலியவை காண்க. அற்றைநாள் இட்டு எடுப்பார்போல் - அங்குத்தடவுதல் - அன்றே அப்பொழுதுதான் புகவிட்டுத் தடவி எடுக்க முயலும் பாவனை போல். இழிந்து - உள்ளிறங்கி. தடவுதலும் (3284), ஒழிந்தருள - மொழிந்தருளத் - தனித்தொண்டர் (3285), போற்றிசைத்து (3286), ஏத்துவார் (3287), என்று - பரவுதலும் (3288), எடுத்துக் - கரையேற்றப், பொழிந்திழிந்தது - தொழுதார் (3289) என்று இந்த ஆறு பாட்டுக்களையும் கூட்டி முடிபுகொள்க. |
|
|