பாடல் எண் :3285

நீற்றழகர் பாட்டுவந்து திருவிளையாட் டினினின்று
மாற்றுறுசெம் பொன்குளத்து வருவியா தொழிந்தருள
"ஆற்றினிலிட் டுக்குளத்திற் றேடுவீ! ரருளிதுவோ?
சாற்று"
மெனக் கோற்றொடியார்மொழிந்தருளத்தனித்தொண்டர்.
131
(இ-ள்.) நீற்றழகர்......ஒழிந்தருள - திருநீற்றழகராகிய இறைவர் நம்பிகளது பாட்டினை உவந்தாராகித் திருவிளையாட்டினை உட்கொண்டு மாற்றுப் பொருந்திய செம்பொன்னினைத் திருக்குளத்தில் வருவிக்கா தொழிந்தருள; ஆற்றினிலிட்டு.....மொழிந்தருள - "ஆற்றினிற் போட்டுக் குளத்தினிலே தேடுவீர்! அருள் இருந்தது இவ்வாறுதானோ? கூறுவீர்!" என்று கோற்றொடியாராகிய பரவையம்மையார் மொழிந்தருளவே; தனித் தொண்டர் - ஒப்பற்ற தொண்டராகிய நம்பிகள்,
(வி-ரை.) நீற்றழகர் - சிவபெருமான். நீறு - சங்காரக் குறிப்பு; சங்காரத்தின்பின் புனருற்பவம் நிகழ்தல்போல ஈண்டு முன் மறைந்த பொன் மீளத்தரப்படும் நிலைக்குறிப்பு.
பாட்டு உவந்து - நம்பிகள் இனிப்பாடும் திருப்பதிகத்தினைக் கேட்டலில் விருப்பமுற்று; "பண்ணி னேரு மொழியாளென் றெடுத்துப் பாடப் பயன்றுய்ப்பான்" (1533) என்பது முதலியவை காண்க. "படியிலா நின்பாட்டிற் பெருவிருப்பன் பரமனென்ப, தடியனே னறிந்தனன்" (நால்வர் - நான்மணிமாலை) என்றும், "உறழ்ந்த கல்வி யுடையானு மொருவன் வேண்டு மெனவிருந்து....நினைத்தோழமை கொண்டான்" என்றும் இதனை விதந்து போற்றினார் பிற்காலத்து விளங்கிய சிவப்பிரகாசர்.
திருவிளையாட்டினின்று - வருவியா தொழிந்தருள - சிறிது தாமதித்தலே ஈண்டுத் திருவிளையாட்டு எனப்பட்டது; அதன் பயனாவது பரவையம்மையார் தாம் கொண்ட கருத்தினையே உறுதி என்றுகொண்டு மீண்டும் "ஆற்றினில்...சாற்றும்" என மகிழ்ந்து கேட்கும் இன்பம் சிறிதுநேரம் பெறவைத்தலும், பின்னர் நம்பிகள் பொன்பெற வேண்டிப் பதிகம் பாட வைத்தலும், அதனால் உலகின்புற வைத்தலும், பிறவுமாம்.
மாற்றுறு செம்பொன் - உயர்ந்த மாற்றினை உடைய - "ஆயிரத்தெட்டுமாற்றாக வொளிவிடும் பொன்" (தாயுமா). மாற்று உறு - முன் கொடுத்ததனிலும் உரை தாழ்ந்து சிறிது மாறுதல் பெறும் பொன் என்ற பிற் சரிதக் குறிப்பும் ஆம்.
வருவியா தொழிதல் - சிறிது நேரம் தாழ்த்தல்.
ஆற்றினில்....அருளிதுவோ? - இஃது ஆற்றிலிட்டுக் குளத்திற்றேடுதல் என்ற பழமொழியை உள்ளடக்கி வினாவியபடி; வீண் காரியம் என்றது உட்கோள்; ஆற்றினில் புக இட்டபொருள் ஆற்றினில் அவ்விடத்துத் தேடினும் அகப்படுதல் அரிதாயிருக்க, அங்கு விட்டு முற்றும் வேறாகிய குளத்திற்கிட்டுதல் இயலாத காரியம் என்றபடி பழமொழி ஈண்டு முதுகுன்றின் மணிமுத்தாறும் ஆரூரின்கமலாலயக் குளமுமாக மேலும் மிகவும் பொருத்தமாய்ப் பரவையாரது நகைக்கிடமாதல் காண்க; "ஆற்றிற் கெடுத்துக் குளத்திற் றேடிய ஆதரைப் போல்" (திருநல்லூர் - திருவிருத்தம்.) என்று இதனை வீண் காரியத்துக்கு உவமித்தல் காண்க.
அருள் இதுவோ? - உமது அருள் எம்பால் நிகழ்வது இவ்வாறோ?" "அவரருளாலே" (3281) "என்னுடைய நாதனருளால்" (3282) என்று விதந்து பேசிய அருளின் தன்மை இதுதானோ என்ற குறிப்பும்படக் கூறியது.
மொழிந்தருள - பரவையம்மையார் மொழிந்தமையே பின்னர் வரும் அரிய திருப்பதிகத்துக்குக் காரணமாகி உலகமுய்யும் வழியாய் வருதலின் அருள என்றார்.
தனித்தொண்டர் - இருவருள்ளே பரவையார் அவ்வாறு கூறத்திருவருளுண்மையில் தனித்து நின்ற என்றதும் குறிப்பு; தனி - ஒப்பற்ற.