"முன்செய்த வருள்வழியே முருகலர்பூங் குழற்பரவை தன்செய்ய வாயினகை தாராமே தாரு"மென மின்செய்த நூன்மார்பின் வேதியர்தா முதுகுன்றிற் "பொன்செய்த மேனியினீ" ரெனப்பதிகம் போற்றிசைத்து, | 132 | (இ-ள்.) "முன் செய்த....தாரும்" என - மனம் அவிழும் பூக்களை முடித்த குழலினையுடைய பரவையாரது சிவந்த வாயின் நகை செய்யாதபடி, முன்னர்த் திருமுதுகுன்றத்திற் செய்த அருளின்படியே பொன்னினைத் தந்தருள்வீர் என்ற கருத்துடன்; மின்செய்த....வேதியர்தாம் - விளங்கும் பூணூலை அணிந்த மார்பினையுடைய நம்பிகள்; முதுகுன்றில்...போற்றிசைத்து - திருமுதுகுன்றத்திலே எழுந்தருளிய பொன்போன்ற திருமேனியுடையவரே என்று தொடங்கிய திருப்பதிகத்தினாற் றுதிசெய்து. (வி-ரை.) நகை தாராமே - முன் செய்த அருள் வழியே - தாரும் - என்று கூட்டுக. முன்செய்த அருளாவது "செழுமணி முத்தாற் றிட்டிப், பொருளினை முழுது மாரூர்க் குளத்திற்போய்க் கொள்க" (3262) என்று முன்னர்த் திருமுதுகுன்றிற் பொன் தந்து சொல்லியருளிய திருவாக்கு. அருள் வழியே - அவ்வருளின்படியே; முன்செய்த அருள்வழியன்றியும் எஞ்ஞான்றும் எவ்விடத்தும் தோழமைத் திறத்தினால் நம்பிகள் வேண்டிய வேண்டியாங்குத் தருபவர் இறைவர்; எனினும், முன்செய்த அருளின் வழியே தாரும் என்றது ஈண்டுப் பொன் தருவது இறைவரது திருவாக்கு நிறைவேறுதலுமாகும் என்று இறைவர்பால் இரட்டைக் கடமையாதல் நினைவூட்டியவாறாம். நம்பிகள் பொன்பெறுதல் திருவாரூர்ப் பெருமான்பால் வேண்டாது பிற பதிகளில் வேண்டிப் பெறுவது பற்றி முன் உரைத்தவை பார்க்க; ஈண்டுத் திருமுதுகுன்றரைப் போற்றுதல் அக்கருத்தும் பற்றியது. முருகலர் பூங்குழல் - மலர்களை அலரும் பருவத்தே அணிதலும், அவை குழலில் அணிந்தபோது புதுப்பூவாய் அங்கு மலர்தலும், மரபும் பயனும் பற்றியன - "வம்பமருங் குழலாள் பரவை" (2); "பூத்தாருங் குழலாள்" என்பது பதிகம். பரவைதன் செய்யவாயின் நகைதாராமே தாரும் - என்றதனால் பரவையார் நம்பிகளுடனே நின்று நகைத்துப் பரிகசித்து மொழிந்தமை பெறப்படும்; "பரவையிவடன்முகப்பே" என்ற பதிகம் இதற்கு அகச்சான்று. நகை தாராமே - நகை செய்யாதபடி; தாராமே தாரும் - என்றது சொல் அணிநலம்; முரண்டொடை என்பர். "முன் செய்த....தாரும்" என - இது பதிகக் கருத்தும் குறிப்புமாம். மின்...வேதியர் - நம்பியாரூரர், "பொன்செய்த மேனியினீர்" என - பதிகத் தொடக்கமாகிய முதற்குறிப்பு. பொன் செய்த - செய்த - உவமவுருபு; மின் செய்த - செய்தல் - புலப்படுத்துதல் - விளைத்தல். சாராமே தாரும் - என்பதும் பாடம். |
|
|