முட்டவிமை யோரறிய முதுகுன்றிற் றந்தபொருள் சட்டநான் பெறாதொழிந்த தளர்வினாற் கையறவாம் இட்டளத்தை யிவளெதிரே கெடுத்தருளு" மெனுந்திருப்பாட் டெட்டளவும் பொன்காட்டா தொழிந்தருள வேத்துவார், | 133 | (இ-ள்.) முட்ட இமையோர்...எனும் - தேவர்கள் எல்லாரும் அறியும்படி திருமுதுகுன்றத்திலே தந்தருளிய பொருளினை விரைவில் நான் பெறாது விட்டதளர்ச்சியினால் வந்த செயலற்ற தன்மையதாம் துன்பத்தை இந்தப் பரவையின் எதிரிலே தீர்த்தருளும் என்னும் கருத்துடைய; திருப்பாட்டு...ஏத்துவார் - எட்டாவது திருப்பாட்டின் அளவும் பொன்னை இறைவர் அங்கு வருவித்துக் காட்டாமல் ஒழிய மேலும் துதிப்பாராகி, (வி-ரை.) முட்ட இமையோர் அறிய முதுகுன்றில் தந்த பொருள் - முட்ட - எல்லாரும்; தேவர்கள் அறியத் திருமுதுகுன்றத்திற் பொன் தந்தமை "உம்பரும் வானவரும் முடனே நிற்கவே யெனக்குச், செம்பொன்னைத்தந்தருளித் திருமுதுகுன்றமர்ந்தீர்" (2) என்ற பதிகத்தால் விளங்கும் அகச்சான்றுடையது; இதனால் நம்பிகள் இறைவரைப் பொன் வேண்டிய செயலும் அவர் அருளியதும் உலகினர் எவரும் அறிய நிகழ்ந்தனவல்ல என்பதும் பெறப்படும்; ஆயின் "இங்கு உம்பரும் வானவரும் அறிய" என்று கூறியது "இறைவரே! உமது அருளுக்கும்திருவாக்குக்கும் சான்றாக மண்ணவ ரன்றி விண்ணவர் உள்ளார்; நீர் மறுக்க இயலாது" என்று தோழமைத்திறத்தால் அவருக்கு நினவூட்டுவார் போன்ற குறிப்புடையது. சட்டநான் பெறாதொழிந்த தளர்வினால் - சட்ட - செப்பமாக - செவ்வியதாய்; "சட்டவினியுளது சத்தேகாண்" (போதம். 9-2); "சட்ட என்பது செப்பப் பொருட்டாயதோர் அகரவீற் றிடைச்சொல்" (போதம் - மாபாடியம்); சட்ட - விரைவாக என்றலுமாம்; "சட்ட நேர்பட வந்திலாத சழக்கனேன்" (திருவா). பெறாதொழிந்த தளர்வு - பெறாமை காரணமாக வந்த தளர்ச்சி. கையறவாம் இட்டளம் - கையறவு - செயலற்ற தன்மை; இட்டளம் - துன்பம். இவள் எதிரே - இவள் - என்ற அணிமைச் சுட்டுப் பரவையாரும் அங்கு உடனிருத்தலைக் குறிக்கும். "இவள் தன் முகப்பே" "இவள் வாடுகின்றாள்" என்பன பதிகம்; எதிரே - இவள் கண் முன்னே - இவள் காணும்படி; இவள் கொண்ட ஐயப்பாடும் (3282) துணிவு (3285) மாகியவற்றுக்கு மாறாக உணர்ந்துகொள்ளும்படி. பொன்பெறாத - கையறவாம் - இட்டளத்தைக் கெடுத்தருளும் - துன்ப நீங்குமாறு பொன் கொடுத்தருளும் என்றபடி. "தந்தருளாய்" என்பது பதிகம். எனும் - என்ற கருத்துடைய. திருப்பாட்டு எட்டளவும் - "உம்பரும்" என்ற 2-வது பாட்டு முதல் "பரசாருங் கரவா" என்ற எட்டாவது பாட்டுவரை; இப்பாட்டுக்கள் எல்லாம் இக்கருத்துடையன என்பது இட்டளங்கெடவே (யருளீர்) என்ற பதிக மகுடத்தினால் அறியப்படும். இங்கு எட்டுப் பாட்டளவும் இறைவர் பொன் காட்டா தொழிந்தருளினர் என்பதும், அதன் மேல் ஒன்பதாவது பாட்டில் அரிது வேண்டின அளவிற் பொன் கொடுத்தருளினர் என்பதும் மேல் வரும் பாட்டிற் கூறுவார். இவ்வாறு ஒரு பதிகத்தினுள் இன்னின்ன பாட்டில் இன்னின்ன நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன என்று எடுத்துக் காட்டியருளுதல் ஆசிரியரது தெய்வ வருட்கவி நலம்; "பண்ணினேர் மொழி" என்ற பதிகம் பற்றி "உண்ணீர்மை"; (1533) என்ற விடத்தும், "மட்டிட்ட புன்னை" என்ற பதிகம் பற்றி "எடுத்த பாட்டினில்" (2987) என்ற இடத்தும் ஆசிரியர் உரைத்தவையும், பிறவும் ஒப்பு நோக்குக. காட்டா தொழிந்தருள - பொன் காட்டாமையும், பின்னர்க் காட்டுவது போலவே அருளிப்பாடேயாம் என்பது, "எக்கிர மத்தி னாலு மிறைசெய லருளேயென்றும்" என்று வருவனவாதி ஞான நூன்முடிபுகளாற் கண்டுகொள்க. ஏத்துவார் பரவுதலும் - என்று மேல்வரும் பாட்டுடன் கூட்டுக; ஏத்துவார் - ஏத்துவாராகி - முற்றெச்சம். |
|
|