பாடல் எண் :3288

"ஏத்தாதே யிருந்தறியே" னெனுந்திருப்பாட் டெவ்வுலகுங்
காத்தாடு மம்பலத்துக் கண்ணுளனாங் கண்ணுதலைக்
"கூத்தா!தந் தருளாயிக் கோமளத்தின் முன்"னென்று
நீத்தாருந் தொடர்வரிய நெறிநின்றார் பரவுதலும்,
134
(இ-ள்.) ஏத்தாதே...திருப்பாட்டு - எப்போதும் ஏத்தாமல் இருந்தறியேன் என்ற கருத்துடன் அத்தொடக்கமுடைய திருப்பாட்டினை; எவ்வுலகும்....கண்ணுதலை - எல்லாவுலகங்களையும் காத்து ஆளுகின்றாராய்த் திருவம்பலத்தின்கண் உள்ளாராகிய கண்ணுதற் பெருமானை; கூத்தா!....என்று - அருட்பெருங் கூத்தனே! இந்தக் கோமளமாகிய பரவையின் முன்னே தந்தருள்வாயாக! என்று; நீத்தாரும்....பரவுதலும் - நீத்தார்களாகிய துறவிகளாலும் தொடர்தற்கரிய நெறியில் நின்ற நம்பிகள் துதித்தலும
(வி-ரை.) "ஏத்தாதிருந்தறியேன்" என்னும் திருப்பாட்டு; இது பதிகத்துள் ஒன்பதாவது திருப்பாட்டு. அதன் கருத்தினை இங்கு ஆகிரியர் உரைத்தருளுகின்றமை காண்க.
"எனும்" திருப்பாட்டு - என்று தொடங்கும் பாட்டு; முதற் குறிப்பு.
எவ்வுலகும் காத்து ஆடும் - இறைவரது ஆடல் எல்லா வுலகங்களையும் சிருட்டி முதலிய ஐந்தொழில் செய்து காத்தலேயாம் என்பது.
அம்பலத்துக் கண்ணுளன் - அம்பலம் - திருமன்று; (1) கண்ணுளன் - அத்திருமன்றத்தின் கண்ணே உள்ளவன். கண் - ஏழனுருபு; (2) கண்ணுள் - கூத்து; கண்ணுளள் - கூத்தாடுபவன்; (3) கண் - அருட்கண்; கண்ணுளன் - அருட்கண். அருணோக்க முடையவர் என்று மூன்று பொருளும் பெற வைத்த தமிழ் நலம் கண்ணுளனாங் கண்ணுதல் - சொல்லணி.
கூத்தா! - கூத்தனே!; திருவாக்கு அருளியபடி செய்யாது தாழ்க்கும் இதுவும் உமக்கு ஓர் கூத்தா? என்ற வினாக் குறிப்பும் காண்க.
இக்கோமளத்தின்முன் தந்தருளாய் - என்க; தந்தருளாய் என்ற முற்றுவினையினை முன் வைத்தது விரைவுக் குறிப்பு. கோமளம் - மென்மை, அழகு, இளமை என்றவற்றின் தொகுதி. இத்தன்மைகள் எல்லாங்கொண்ட அருமைப்பாடுடைய பரவையார்; கோமளம் - கோமளத்தினை உடையாளைக் குறித்து நின்றது. "பரவையிவள் தன் முகப்பே கூத்தா தந்தருளாய்" என்பது பதிகம்.
நீத்தாரும் தொடர்வரிய நெறி நின்றார் - ஆரூர் நம்பிகள்; ஈண்டு இவ்வாற்றாற் கூறியது, பொன் வேண்டுதலும் பெண்ணைப்பற்றி எடுத்துக் கூறுதலும் பற்றிப் பொன்னாசை பொண்ணாசைகளின் தொடர்புடையார் என்று கொண்டு தவறுபட்டு அபசாரப்படுவோருளராயின் அவர்களைத் தெருட்டி ஈடேற்றும் கருணைத்திறம் பற்றி என்க. நீத்தாருத் தொடர்வரிய நெறிநிற்றல்;"ஏத்தா திருந்தறியேன்" என்ற பதிகத் திருப்பாட்டானும் பெறப்படும். "துறந்த முனிவர் தொழும்பரவை துணைவா" என்று இதனை எடுத்துக் கூறினர் சிவப்பிரகாசர். தொடர்வரிய - பின்பற்றுதல் அரிதாகிய; இந்நெறி நிற்றற்கரியதாகிய என்றலுமாம்.