கொந்தவிழ்பூங் கொன்றைமுடிக் கூத்தனார் திருவருளால் வந்தெழுபொன் றிரளெடுத்து வரன்முறையாற் கரையேற்ற, அந்தரத்து மலர்மாரி பொழிந்திழிந்த தவனியுள்ளோர் "இந்தவதி சயமென்னே! யார்பெறுவா" ரெனத்தொழுதார். | 135 | (இ-ள்.) கொந்தவிழ்பூ....திருவருளால் - கொத்துக்களாக மலர்கின்ற கொன்றைப்பூக்களை முடித்த அருட்கூத்தப் பெருமானது திருவருளினாலே; வந்தெழு...கரையேற்ற - வந்தெழுந்த பொற்குவையினை எடுத்து முறைப்படி நம்பிகள் கரையேற்ற; அந்தரத்து...இழிந்தது - தேவர்களுலகத்தினின்றும் பூமழை பொழிந்து வீழ்ந்தது; அவனியுள்ளோர்...தொழுதார் - இவ்வுலகத்திலுள்ளோர்கள் இந்த அதிசயம்தான் இருந்தவாறென்னே! இவ்வாறு வேறு யார்தாம் பெறவல்லர்? (ஒருவருமிலர்) என்று கூறித் தொழுதார்கள். (வி-ரை.) கூத்தனாற் பொன் வரப்பெறும்; (9) திருப்பாட்டில் "கூத்தா" என்ற தன்மையால் நம்பிகள் இறைவரை விளித்து வேண்டிப் பெற்றமையால் அப்பெயராலே கூறினார்; விளித்து வேண்டிய அந்தக் கூத்தனார் என்று சுட்டு விரிக்க; ஏனைப் பாட்டுக்களில் "அடியேன்" என்ற நம்பிகள் இப்பாட்டில் "கொடியேன்" என்றமை கருதுக. திருவருளால் - "தந்து அருள்வாய்" என்ற அருள்; "அருளால்" (3281 - 3282) என்றதும் கொள்க. வந்தெழு பொன் - வந்தெழுந்தது - அவ்வாறு வந்த பொன்னை என்க; பொன்வந்தமை வேறு கூறாது ஆற்றலாற் பெற வைத்தார்; முன்னர்ப் பொன் தந்தமை உலகரறியார்; அதுபோல இங்கு வந்தமையும் உலகரறியார் என்பார் வெளிப்படையாகக் கூறாராயினர். வரன்முறையாற் கரையேற்ற - 12000 பொன்னையும் எவ்வாறு எடுத்து ஏற்ற வேண்டுமோ அவ்வாற்றால் என்பதாம்; வரப்பெற்ற அந்த முறை. மாரி - பொழிந்திழிந்தது - மலர் மழை வீழ்ந்தது; இழிந்தது - உயர்வுப் பொருள் குறித்தது; "வீழ்க தண்புனல்"(தேவா). இந்த....பெறுவார்என - இது பொன் வரக்கண்ட உலக மக்கள் கூற்று; தொழுதார் - திருவருள் வெளிப்பாட்டினை வணங்கினர். வருமுறையால் - என்பதும் பாடம். |
|
|