ஞாலம்வியப் பெய்தவரு நற்கனக மிடையெடுத்து மூலமெனக் கொடுபோந்த வாணியின்முன் னுரைப்பிக்க, நீலமிடற் றவரருளா லுரைதாழப், பின்னுநெடு மாலயனுக் கரியகழல் வழுத்தினார் வன்றொண்டர். | 136 | (இ-ள்.) ஞாலம்....எடுத்து - முன் கூறியபடி உலகத்தார்கள் எல்லாம் வியந்து அற்புதமடையும்படி வந்த நல்ல பொன்னில் இடையில் எடுத்து, மூலமென...உரைப்பிக்க - மாற்றுக்கு மூலமாகத் தாம் மச்சம் எடுத்து வந்த மாற்றாணியோடு ஒப்பிடும்படி உரைத்துப் பார்க்க; நீலமிடற்றவர்....தாழ - திருநீலகண்டராகிய சிவபெருமானது திருவருளினாலே மாற்றுத் தாழ்ந்திருக்க; பின்னும்...வன்றொண்டர் - நெடுமாலுக்கும் பிரமனுக்கும் அரிய திருவடிகளை வன்றொண்டராகிய நம்பிகள் பின்னரும் துதித்தனர். (வி-ரை.) ஞாலம் வியப் பெய்திய செயல் முன் பாட்டிற் கூறினார். நற்கனகம் - இறைவர்பாற் பெறுதலானும் அடியார்களுக்குப் பயன்படுதலானும் நற்கனகம் என்றார்; ஏனையோர்பால் எல்லாம், கனகம் மாயாகாரியப் பண்டமாய் மயக்கத்துக்கும் பிறவிக்கும் ஏதுவாய் நிற்கும்; ஆளுடைய அரசுகள் திருப்புகலூரில் திருமுற்றத்தில் திருவருளால் வந்த செம்பொன்னு நவமணியும் ஆகியவற்றை யெல்லாம் கையாலும் தீண்டாது திரு உழவாரத்தினில் ஏந்திப் பூங்கமலவாவியினிற் புக எறிந்தருளிய வரலாறு இங்கு நினைவு கூர்தற்பாலது. ஆனால் அங்கு அரசுகளது நன்னிலைமையினை உலகுக்குக் காட்டுவாராகி இறைவர் அவ்வாறு உழவாரம் நுழைந்த விடமெல்லாம் பொன்னும் மணியும் வர அருள் செய்தார்; அத்திருவருள் வழியே அரசுகளது நன்னிலையாகிய உண்மை நிலை காட்டப்பட்டு உலகமறிந்து உய்திபெற்றது; ஈண்டும் திருப்பங்குனி உத்திரத் திருநாளின் அடியார் பொருட்டு நம்பிகள் வேண்ட இறைவர் அருளிய பொன், ஆற்றிலிட்டுக் குளத்தில் எடுக்கப் பெற்று உலகமறிந்து உய்தி பெற்றது; முன்னரும் "நன்னிதியம்" (3281) என்றமை காண்க. இடை எடுத்து - பொன்னில் இடையே எடுத்து; நிறுத்து எடுத்து என்பர்முன் உரைகாரர். மூலம் எனக் கொடுபோந்த ஆணி - உரைத்துப் பார்த்து மாற்றறியும்படி வெட்டிக்கொண்ட உரையாணி. மூலம்; இதனைக் கொண்டு மீதப் பொன்னை மாற்று அளவு காண்பதால் இது மூலம் எனப்பட்டது; ஆணி - உரையாணி - "தொண்டர்க்காணி" (1896); "தொண்டராணிப் பொன்" (அரசு. தேவா); ஆணி எனக் கொடுபோந்தமை - "மச்சம் வெட்டிக் கைக்கொண்டு" (3263) என்ற விடத்துக் காண்க. ஆணியின்முன் உரைப்பிக்க - வந்த பொன்னிடை எடுத்து ஆணியினையும் அதனையும் உறைகல்லில் தனித்தனி உறைப்பித்து ஒப்புப் பார்க்க; இது பொன்னினை உயர்வு தாழ்வு காணும் முறை. அருளால் உரைதாழ - திருவருளாற் பெற்ற பொருள் திருவருளால் ஆற்றில் இட்டுக் குளத்திற் பெறும்போது அவ்வாறே தரப்படும் என்று கொள்ளாது தாம் உரை பார்க்க மச்சம் வெட்டிக் கைக்கொண்டமையாலே உரைதாழச் செய்தருளினர் இறைவர்; "இத்தந் திரத்திற் காண்டுமென் றிருந்தோர்க், கத்தந் திரத்தினவ்வயி னொளித்தும்"...."அருந்தவர் காட்சியுட்டிருந்த வொளித்தும்"..."பற்றுமின் னென்றவர் பற்று முற்றொளித்துந், தன்னே ரில்லோன் றானே யான்தன்மை" (திருவா - திருஅண்டப்பகுதி. 130 -145); இனித், திருவிளையாட்டினினின்று பொன் றரத் தாழ்த்தமை போலவே நம்பிகள் பாட்டுவந்து ஈண்டும்உரைதாழ அருளினர் என்றலுமாம்;"அடங்காத ஆதரவான், மகவுமகிழ்ந் துவப்பார்கள் வன்மைபுரி செயலினால், இகழ்வனவே செய்தாலு மிளம்புதல்வர்க்கின்பமே, நிகழுமது போல்" (சாக். நாய - புரா - 10) என்னும் கருத்து ஈண்டு வைத்துக் காணற்பாலது; "பாட்டுவந்து" (3285 -3291). பின்னும் வழுத்தினார் - என்று கூட்டுக; வரப் பொன்பெற முன்னர் வழுத்தியது போலவே, மாற்றுயர்ந்துவரப் பின்னரும் வழுத்தினார் என்று உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை; "மீட்டும்" (3291) வழுத்திய பதிகம் கிடைத்திலது! மாலயனுக்கரிய பிரான் - திருவருட் செயல் அறியவரியது என்பது குறிப்பு. |
|
|