மீட்டுமவர் பரவுதலு மெய்யன்ப ரன்பில்வரும் பாட்டுவந்து கூத்துவந்தார் படுவாசி முடிவெய்தும் ஓட்டறுசெம் பொன்னொக்க ஒருமாவுங் குறையாமற் காட்டுதலு மகிழ்ந்தெடுத்துக் கொண்டுகரை யேறினார். | 137 | (இ-ள்.) மீட்டும் அவர் பரவுதலும் - மீண்டும் நம்பிகள் அதுபற்றித் துதித்தலும்; மெய் அன்பர்...காட்டுதலும் - மெய் அன்பராகிய அவரது அன்பினில் ஊற்றெடுத்து வருகின்ற பாட்டினை மகிழ்ந்து கூத்துவந்த பெருமானார் உண்டாகிய குறைவு நீங்கிய மாற்றுயர்ந்த செம்பொன்னை ஒரு மாப்பொன் தன்மையும் குறையாமல் காட்டுதலும்; மகிழ்ந்தெடுத்துக் கொண்டு கரை ஏறினார் - மகிழ்ச்சியுடன் கைக்கொண்டு குளத்தின் கரையினை ஏறியருளினார். (வி-ரை.) மீட்டும் அவர் பரவுதலும் - பின்னும் "வழுத்தினார்" என்றபடி மேலும் பரவியவுடனே. மெய் அன்பர் - "மெய்யுணர்ந்தார்" (3282) என்றவிடத் துரைத்தவை பார்க்க; மெய் இயற்கை யடைமொழி. அன்பில் வரும் பாட்டு - அன்பே காரணமாக ஊறி வெளிவரும் பாட்டு. பாட்டுவந்து கூத்துவந்தார் - பாட்டுக் கேட்கும் காரணமாக ஓர் திருவிளையாட்டினை மேற்கொள்பவர். உவந்து - உவத்தலினால்; "பாட் டுவந்து திருவிளையாட்டினின்று" (3285) என்று முன்னர்ப் பொன் வருவியா தொழிந்த நிலையிற் கூறியதும் காண்க; "கூத்தா" என்ற பதிகமும், அது குறித்தே முன்னரும் (3288) கூறியதும் காண்க. படுவாசி - உளதாக்கிய மாற்றுக் குறைவு; வாசி - குறைவு என்ற பொருளில் வந்தது; "வாசி தீரவே" (தேவா). வாசி குறைவெய்தும் - மாற்றுக் குறைவு நீங்கிய. ஓட்டுஅறு - ஒட்டு என்பது எதுகை நோக்கி ஓட்டு என நின்றது; ஓட்டு - ஒப்பு. ஒருமாவும் குறையாமல் - மா - மிகச் சிறிய அளவு. ஒன்றில் இருபதில் ஒரு பங்கு 1/20 கொண்ட அளவு என்பர். காட்டுதலும் - எனவே முன்னர் உரைதாழ நின்றது அவ்வாறு காட்டிய அளவேயன்றிப் பொன்னின் தன்மையிற் குறைவின்று என்றபடி. இறைவர்உண்ணின்று காட்டிய அளவே உயிர் காணவல்லது என்பது ஞான நூன்முடிபு. எடுத்துக்கொண்டு கரை ஏறினார் - அதுவரை குளத்தின் வடகீழ்பாற் படித்துறையில் நீரினுள் நின்றிருந்த நம்பிகள் கரை ஏறினார் என்பதாம். இந்த இடத்தில் இப்போது "மாற்றுரைத்த பிள்ளையார்" கோயில் விளங்குகின்றது. கரை ஏறினார் - நம்பிகள் கரை ஏறியவதனால் உலகம் உண்மை அருள் நெறியினை உணர்ந்து கரையேறிற்று; ஆதலின் ஏறினார் என்பது ஏற்றினார் எனப் பிறவினைப் பொருள் கொள்ளவும் நின்றது. பாட்டுத் தந்த கூத்தனார் - என்பதும் பாடம். |
|
|