பாடல் எண் :3292

கரையேறிப் பரவையா ருடன்கனக மானதெலாம்
நிரையாளிற் சுமையேற்றி நெடுநிலைமா ளிகைபோக்கித்
திரையேறும் புனற்சடிலத் திருமூலட் டானத்தார்
விரையேறு மலர்ப்பாதந் தொழுதணைந்தார் வீதியினில்.
138
(இ-ள்.) கரையேறி - கரையினில் ஏறிப்போந்து; பரவையாருடன்......போக்கி - பொன்னெல்லாம் வரிசைப்பட ஆள்களின்மேற் சுமையாக ஏற்றுவித்துப் பரவையம்மையாருடனே நீண்ட நிலையினையுடைய திருமாளிகையிற் செல்லவிடுத்து; திரையேறும்...தொழுது - அலை வீசும் கங்கையைத் தாங்கிய சடையினையுடைய திருமூலட்டானேசுவரரது மணமுடைய மலர் போன்ற திருவடிகளைச்சென்று தொழுது (அதன்பின்); வீதியினில் அணைந்தார் - (நம்பிகள்) திருவீதியில் எழுந்தருளி வந்தனர்.
(வி-ரை.) கனகமான தெல்லாம் - சுமை ஏற்றிப் பரவையாருடன் - மாளிகை போக்கி என்க.
நிரை ஆளிற் சுமையேற்றி -
12000 பொன் பெரும்பார மாதலின் ஒருவராற் சுமக்கலாற்றாது ஆளிற் சுமை ஏற்றல் வேண்டப்பட்டது. நிரை - ஒழுங்குபட; சுமையின் ஒழுங்கு; பல ஆட்களின் மேல் என்ற குறிப்புமாம்; சுமை - பாரம்.
கனகமானதெல்லாம் சுமை ஏற்றி மாளிகை போக்கிப் பரவையாருடன் தொழுது என்று கூட்டி உரைத்தலுமாம். பொன்னைத் திருமாளிகையிற் சேர்த்தலுக்கு பணி ஆட்களே போதும் என்பது; என்னை? "செம்பொன் இட்டிகைகள் ஆள்மேனெருங்கி யணியாரூர்....பரவையார் தம் மாளிகையிற்புகத்தாமும்...பெருமானார் தம்மை வணங்கி யுவந்தணைந்தார்" (3208) என்ற வரலாறு போலக் காண்க.
திருமூலட்டானத்தார் - பாதம் தொழுது - "புராதனரைப் புக்கிறைஞ்சி" (3283)ப் போந்து அருள் வழியே பொன்வரப் பெற்றாராதலின், மீண்டு திரும்பும் போதும் அவரைத் தொழுது திருமாளிகையிற் சேர்தல் மரபு. இவை, எல்லாம் இறைவர் செயலேயாய்க் காணும் பெரியோர் செய்கை.
வீதி - இறைவர் கோயிலின்புறம் உள்ள வீதி; பரவையாரது திருமாளிகைக்குச் செல்லும் வழி பூங்கோயிலின் தெற்குத் திருவாயிலின் புறத்துத் தெற்கு நோக்கிச் செல்லும் திருவீதியில் உள்ளது.
நிரையேயாளிற் சுமத்தி - என்பதும் பாடம்.