வந்துதிரு மாளிகையி னுட்புகுந்து மங்கலவாழ்த் தந்தமிலா வகையேத்து மளவிறந்தா ரொலிசிறப்பச் சிந்தைநிறை மகிழ்ச்சியுடன் சேயிழையா ருடனமர்ந்தார் கந்தமலி மலர்ச்சோலை நாவலர்தங் காவலனார். | 139 | (இ-ள்.) வந்து...புகுந்து - வந்து பரவையம்மையாரது திருமாளிகையினுள்ளே புகுந்து; மங்கல வாழ்த்து...சிறப்ப - அளவற்ற பேர்கள் எல்லையற்ற வகையால் ஏத்துகின்ற மங்கல வாழ்த்தின் ஒலி சிறந்து ஏங்க; கந்தமலி...காவலனார் - மணம் பொருந்திய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருநாவலூரவர்களின் காவலராகிய நம்பிகள்; சிந்தை நிறை...அமர்ந்தார் - மனநிறைவாகிய மகிழ்ச்சியோடும் பரவையாருடனே விரும்பி எழுந்தருளி யிருந்தனர். (வி-ரை.) வந்து - முன் பாட்டிற் கூறியவாறு திருவீதியிலணைந்து வந்து. அளவிறந்தார் அந்தமிலா வகை ஏத்தும் மங்கலவாழ்த்து ஒலி சிறப்ப - என்று கூட்டுக. சேயிழையார் - பரவையம்மையார் நாவலர் - நாவலூரர் என்றது நாவலர் என நின்றது. காவலனார் - தலைவர். |
|
|