பாடல் எண் :3295

பண்ணிறையும் வகை "பாறு தாங்கி"யென வெடுத்தருளி
உண்ணிறையு மனக்களிப்பா லுறுபுளக மயிர்முகிழ்ப்பக்
கண்ணிறையும் புனல்பொழியக் கரையிகந்த வானந்தம்
எண்ணிறந்த படிதோன்ற வேத்திமகிழ்ந் தின்புற்றார்.
141
(இ-ள்.) பண்ணிறையும்...எடுத்தருளி - பண்ணின் இசை நிறைவு கொள்ளும் வகையாலே "பாறுதாங்கி" என்று தொடங்கியருளி; உண்ணிறையும்....தோன்ற - மனத்தின் உள்ளே நிறைகின்ற மகிழ்ச்சியினாலே திருமேனியில் மயிர்ப்புளகாங்கிதம் கொள்ளவும் கண்கள் நிறைய நீர்பொழியவும் எல்லையில்லாத ஆனந்தம் எண்ணிறைந்தபடி தோன்றவும்; ஏத்தி மகிழ்ந்து இன்புற்றார் - துதித்து மகிழ்ந்து இன்பமடைந்தனர்.
(வி-ரை.) பண் நிறையும் வகை - பண் - பதிகப் பண்ணாகிய கொல்லிப் பண்;
பண் - இசைப் பொதுமை உணர்த்திற் றென்றலுமாம்.
"பாறு தாங்கி" என - இது பதிகத் தொடக்கமாகிய முதற் குறிப்பு. பாறு - பேய்.
உண்ணிறையும்...தோன்ற - மயிர்ப்புளகமுண்டாதல் - கண்ணீர் பொழிதல் - ஆனந்தம் வெளித் தோன்றுதல் இவை உள்ளே நிறைந்த மனக்களிப்பினால்வரும் மெய்ப்பாடுகள். கரை இகந்த ஆனந்தம் உள்நிறைந்தபடி தோன்ற - மிக்கஆனந்தம் உள்ளே நிறைந்தபடியினை வெளித் தோற்றத்தால் கருதலளவையால் அறியும்படி வெளிப்பட; எண் - எண்ணம்.
ஏத்தி மகிழ்ந்து - இன்புற்றார் - ஏத்துதல் - வாக்கின் தொழில்; மகிழ்தல் - மனத்தின் றொழில்; இன்புறுதல் - உள்ளே நிறைந்து புறத்தில் நிகழும் மெய்ப்பாடுகளாலாகிய மெய்யின் றொழில் என மூன்று கரணங்களும் கொள்க.