பாடல் எண் :3296

இன்புற்றங் கமர்நாளி லீறிலரு மறைபரவும்
வன்புற்றினரவணிந்த மன்னவனா ரருள்பெற்றே
அன்புற்றகாதலுட னளவிறந்த பிறபதியும்
பொன்புகென் றிடவொளிருஞ் சடையாரைத்தொழப்போவார்;
142
(இ-ள்.) இன்புற்று அங்கு அமர்நாளில் - இன்பம் பொருந்தி அங்குவிரும்பி எழுந்தருளியிருக்கும் நாட்களிலே; ஈறில்....அருள் பெற்றே - அளவில்லாத அரிய வேதங்கள் துதித்தேத்துகின்ற வலிய புற்றின் அரவினை அணிந்த மன்னவனாரது திருவருள் விடைபெற்றே; அன்புற்ற காதலுடன் - அன்பினானிறைந்த பெரு விருப்பத்தினோடும்; அளவிறந்த...தொழப் போவார் - அளவில்லாத பிறபதிகளிலும் பொன்னொளியும் கரிது என்று சொல்லும்படி ஒளிமிக்கு விளங்கும் சடையினையுடைய இறைவரைத் தொழுவதற்குப் போவாராகி;
(வி-ரை.) ஈறில்அருமறை - "வேதங்கள் அநந்தம்" எனப்படும்; அளவில்லாத சாகை, உபசாகைகளோடு கூறியன.
வன்புற்றின் அரவு அணிந்த மன்னவனார் - வலியபுற்றில் வாழும்அரவு என்பது அரவுகளின் இயல்பு குறித்தது; இறைவர் பூணும் அரவுகள் புற்றில் வாழ்வன என்பதன்று; அரவணிந்த வன்புற்றின் மன்னவனார் என்று மாற்றி புற்றிடங்கொண்டார் எனப் பொருள் கொள்ளுதலுமாம்.
அருள் பெற்றே - அருள் விடைபெற்றே. பிறபதியும் - போவார் - என்று கூட்டுக.
பொன்புற்கென்றிட ஒளிரும்சடை - புற்கென - ஒளி குறைந்து வறிதாகக்காட்ட; சடை பொன்னினும் மிக்கு விளங்கும் என்பதும்.