பாடல் எண் :3297

பரிசனமு முடன்போதப் பாங்கமைந்த பதிகடொறுங்
கரியுரிவை புனைந்தார்தங் கழறொழுது மகிழ்ந்தேத்தித்
துரிசறுநற் பெருந்தொண்டர் நள்ளாறு தொழுவதற்குப்
புரிவுறுமெய்த் திருத்தொண்ட ரெதிர்கொள்ளப் புக்கணைந்தார்
143
(இ-ள்.) பரிசனமும் உடன் போத - பணி செய்யும் பரிசனங்களும் தம்முடன் வர; பாங்கமைந்த....மகிழ்ந்தேத்தி - பக்கத்தில் உள்ள பதிகளிலெங்கும் சென்று யானைத் தோலினைப் போர்த்த இறைவரது திருவடிகளைத் தொழுது மகிழ்ச்சியுடன் துதித்து; துரிசறுநற் பெருந் தொண்டர் - குற்றந் தீர்க்கும் நல்ல பெரிய தொண்டராகிய நம்பிகள்; நள்ளாறு....புக்கணைந்தார் - திருநள்ளாற்றினைத் தொழுவதற்கு நினைந்து சென்று சிவ சிந்தனை மறவாத உண்மைத் திருத்தொண்டர்கள் எதிர்கொள்ள அங்குப் புகுந்து அணைந்தருளினர்.
(வி-ரை.) பரிசனமும் உடன்போத - பரிசனம் - பணி செய்யும் ஏவலாளர்கள்; சுவாமிகளுடன் பரிசனங்கள் செல்வதனை முன் "புடையெங்கு மிடைகின்ற பரிசனமுந் துயில்கொள்ள" (230) என்ற விடத்துக் குறிப்பாலுணர்த்தினர் ஆசிரியர். இங்கு இவர்களை மீண்டும் எடுத்து விதந்து கூறவேண்டுவதென்னையோ? எனின் உலக நிலையில் பரிசனங்கள் ஓரளவு பணி செய்து துணையாவதன்றி வேண்டிய அங்கங்கும் முற்றத்துணையாய் வருவதில்லை; நம்பிகள்பால் முற்றவும் உள்ளும் புறம்பும் வழித்துணையாய் நின்று வேண்டிய இடத்தெல்லாம் துணை செய்து உதவுபவர் இறைவர் தாமேயாம் என்பதனை இனி வரும் வரலாற்றில் திருக்குருகாவூரில், பொதி சோறளித்தும், திருக்கச்சூ ராலக்கோயிலில் சோறிரந்து கொணர்ந்தளித்தும் அருளுமாற்றால் விளங்க வைகின்றார் இறைவர் என்பது குறிப்பால் அறிக. பரிசனமும் - உடனின்று உதவும் துணையாய் எண்ணப்படும் பரிசனமும் என்று உம்மை சிறப்பு.
பாங்கு அமைந்த பதிகள் - பாங்கு பக்கம்; இவை முன்னர் உரைக்கப்பட்டன. திருவிளமர், திருப்பள்ளியின் முக்கூடல் முதலாயின என்பது கருதப்படும்.
துரிசறு நற் பெருந் தொண்டர் - திருவாரூர் நம்பிகள். துரிசு அறும் - வந்து அடைந்து வழிபடும் மக்களது துரிசுகள் அறுதற் கேதுவாகிய; அறுவிக்கும்.
புரிவுறும் - இறைவரது பணிகளையும் அடியார் பணியினையுமே எப்போதும் நினைந்திருப்பவர்; புரிதல் - இடைவிடாது செய்தல்; திருத்தொண்டர் - திருநள்ளாற்றில் உள்ள தொண்டர்கள்; எதிர்கொள்ள - வந்து எதிர்கொள்ளச் சென்று.
புக்கு - திருநள்ளாற்றினுள்ளே புகுந்து.