பாடல் எண் :3299

அங்கணரைப் பணிந்தேத்தி யருளினாற் றொழுதுபோய்
மங்குலணி மணிமாடத் திருக்கடவூர் வந்தெய்தித்
திங்கள்வளர் முடியார்தந் திருமயா னமும் பணிந்து
பொங்குமிசைப் பதிக"மரு வார்கொன்றை" யெனப்போற்றி,
145
(இ-ள்.) அங்கணரை...போய் - இறைவரை வணங்கித் துதித்துத் திருவருள் விடை பெற்றுத் தொழுது சென்று; மங்குலணி....வந்தெய்தி - மேகங்கள் தவழும் அழகிய மாடங்கள் நிறைந்த திருக்கடவூரில் வந்து சேர்ந்து; திங்கள்...பணிந்து - சந்திரன் வளர்தற்கிடமாகிய திருமுடியினை உடைய இறைவரது திருக்கடவூர்த் திருமயானத்தினையும் வணங்கி; பொங்கும்....போற்றி - மேன்மேல் பொங்கும் இசையினையுடைய திருப்பதிகத்தினை "மருவார் கொன்றை" என்று தொடங்கிப் போற்றி, (வி-ரை.) அங்கணர் - திருநள்ளாறர்; அருளினால் - அருள்விடை பெற்று.
ஏத்தி - இப்பதிகம் இப்போது கிடைத்துள்ள பதிகத்தின் வேறு என்பது கருதப்படும்.
திருமயானமும் பணிந்து - உம்மை - திருக்கடவூரினைப் பணிந்ததன்றித் திருமயானத்தினையும் என இறந்தது தழுவிய எச்சவும்மை.
திருமயானம் - திருக்கடவூரும் திருமயானமும் ஒரே பதியின் இரு கூறுகளாக அமைந்து வழிபடப்படுவன; "திருக்கடவூர் மயானம்" என்ற வழக்கும் காண்க. கடவூர் என்பது ஊர்; பதி; அதனுள் திருமயானம் ஒருதலம்; வீரட்டம் ஒரு தலம். "கடவூர் மயானத்து" என்றும், "கடவூர்தனுள் வீரட்டத்து" என்றும், "கடவூரின் மறையோ ரேத்தும் மயானத்து" என்றும் வரும் பதிகம் பார்க்க.
பொங்கும் இசை - இசை வளரப் பயிலப்படும் தன்மை குறித்தது.
மருவார் கொன்றை - இது பதிகத் தொடக்கமாகிய முதற் குறிப்பு.
போற்றி - பணிந்து - ஏத்திச் - சென்றார் - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க.