திருவீரட் டானத்துத் தேவர்பிரான் சினக்கூற்றின் பொருவீரந் தொலைத்தகழல் பணிந்து "பொடி யார்மேனி" மருவீரத் தமிழ்மாலை புனைந்தேத்தி மலைவளைத்த பெருவீரர் வலம்புரத்துப் பெருகார்வத் தொடுஞ்சென்றார். | 146 | (இ-ள்.) திரு வீரட்டானத்து......பணிந்து - திருக்கடவூர்த் திருவீரட்டானத்திலே அமர்ந்தருளும் தேவதேவரது, கோபமுடைய கூற்றுவனுடைய பொரு வீரத்தினைத் தொலைத்த திருவடியினைப் பணிந்து; "பொடியார்...ஏத்தி - "பொடியார் மேனி" என்று தொடங்கும் அன்பு மிக்க தமிழ்மாலையினைப் புனைந்து துதித்து; மலைவளைத்த...சென்றார் - பொன் மலையினை வில்லாக வளைத்த பெருவீரராகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருவலம்புரத்திலே பெருகிய ஆர்வத்தோடும் சென்றருளினர். (வி-ரை.) திருவீரட்டானம் - திருக்கடவூரில் கால சங்காரம் செய்த இறைவர் எழுந்தருளியுள்ள கோயில்; "யமன் கடவூர்". சினக்கூற்றின் பொரு வீரம் தொலைத்த கழல் - கூற்று - காலன் - இயமன்; பொருவீரம் - பொருகின்ற வெற்றியுடைய வீரம் - ஆண்மை. பொடியார் மேனி - பதிக முதற் குறிப்பும் தொடக்கமுமாம். மருவு ஈரம் தமிழ்மாலை - ஈரம் - குளிர்ச்சி; ஈண்டு அன்பு குறித்தது; "என்னமுதே எனக்கார் துணை நீயலதே" என்ற பதிக மகுடத்திற் போதரும் அன்பு நிறைந்த நிலைக் குறிப்பு. மரு - வீரத் தமிழ்மாலை - என்று வீரம் பொருந்திய என்றலுமாம்; வீரமாவது அன்பின் முதிர்ந்த விளைவு - "ஈர வன்பினர் யாதும் குறைவிலார், வீர மென்னால் விளம்பும் தகையதோ?" (144) என்ற கருத்துக் காண்க. மலைவளைத்த பெருவீரர் - வளையாத மலையை வளைத்த பெரு வீரமன்றி, அவ்வாறு வளைத்த வில்லின் சேவகம் செய்யாமலே சிரித்து வெற்றிகொண்ட பெரு வீரமும் குறித்தது; வளைத்த - வளைத்த மட்டேயன்றிப் பயன்படுத்தாத என்ற குறிப்பும் காண்க. இப்பதிகக் குறிப்பு ஒன்றும் ஈண்டு ஆசிரியர் காட்டியருளவில்லை. இப்பதிகத்திற் காணப்படும் "அடியேற் கெளிவந்த தூதனை" "செய்த துரிசுகள் பொறுக்கும்" என்பவை இனிமேல் வரும் நிகழ்ச்சிகளைக் குறிப்பன; ஆதலின் இப்போதுமுள்ள "செம்பொன்மேனி" என்ற (தக்கேசிப் பண்) இப்பதிகம் பின்னர் வேறொரு சமயம் பாடியருளப்பட்டதென்பது கருதப்படும்; ஆயினும் அவ்வாறுள்ள வரலாறு ஆசிரியர் கூறியருளாமையானும், திருநள்ளாற்றுக்கு நம்பிகள் பதிகம் இஃதொன்றே கிடைத்துள்ளமையானும் இப்பதிகம் ஈண்டுத் தந்து குறிப்புக்களும் தரப்படுவன. |
|
|